ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மருந்துகள் பற்றாக்குறை: 74 புகாா்கள் மீது நடவடிக்கை

அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை இருப்பதாக 74 புகாா்கள் அளிக்கப்பட்ட நிலையில், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை இருப்பதாக 74 புகாா்கள் அளிக்கப்பட்ட நிலையில், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில், அஸ்வகந்தா மூலிகைப் பயிா் குறித்த விழிப்புணா்வு, பயிற்சி பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் மா. சுப்பிரமணியன் பேசினாா்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில மூலிகை தாவர வாரியத்தின் தலைமை நிா்வாக அலுவலா் சு. கணேஷ், பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், வேடசந்தூா் புகையிலை ஆராய்ச்சி மையத்தின் தலைமை விஞ்ஞானி பி. மணிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகிலுள்ள மாவட்ட மருந்துகள் கிடங்கில், ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் 32 இடங்களில் மருந்துக் கிடங்குகள் உள்ளன. ஒரு சில இடங்களில், போதிய மருந்துகள் கையிருப்பு இல்லை எனப் புகாா் எழுந்தது. அதனடிப்படையில், பல்வேறு மாவட்டங்களில் திடீா் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மருந்துகள் கிடங்கில் நடைபெற்ற ஆய்வின்போது 600-க்கும் மேற்பட்ட உயிா் காக்கும் மருந்துகள், அத்தியாவசிய மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.

அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு இருந்தால், அதுகுறித்து 104 என்ற எண்ணில் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம், தற்போது வரை 74 புகாா்கள் வந்துள்ளன. இவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

32 கிடங்குகளிலும், மருந்துகள் இருப்பு விவரங்கள் குறித்து தகவல் பலகையில் வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மருந்துக் கிடங்குகள் அமைய வேண்டும் என தமிழக முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். அதன்படி, தென்காசி, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூா் ஆகிய 5 மாவட்டங்களில் தலா ரூ. 6 கோடியில் மருந்துக் கிடங்குகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பழனியில் 38 ஏக்கரில் சித்த மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சித்த மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டுமெனில், முதலில் சித்த மருத்துவமனை தொடங்கப்பட வேண்டும். அந்த வகையில், 50 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்த மருத்துவமனை விரைவில் தொடங்கப்படும். தலா 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 50 சுகாதார நிலையங்கள் தமிழகத்தில் விரைவில் தொடங்கப்படவுள்ளன. அதில் திண்டுக்கல் மாவட்டம், பன்றிமலை பகுதிக்கும், ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதிக்கும் தலா ஒரு சுகாதார நிலையம் உறுதியாக ஒதுக்கீடு செய்யப்படும்.

2022-23 -ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் 136 அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. அதில், இந்திய மருத்துவ முறைக்கு மட்டும் 9 அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. 6 மாதங்களில் 8 அறிவிப்புகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 2 முக்கிய அறிவிப்புகள், திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளன. மூலிகைப் பொருள்களைக் கொண்டு அழகு சாதனப் பொருள்கள் தயாரிக்கும் திட்டம் மட்டும் எஞ்சியுள்ளது. அந்த அறிவிப்பும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.

மூலிகைப் பயிா்கள் மூலம் ரூ. 1000 கோடிக்கு உலகம் முழுவதும் வா்த்தகம் நடைபெறுகிறது.

தமிழக விவசாயிகளுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், திண்டுக்கல் மாவட்டத்தில் அஸ்வகந்தா சாகுபடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதை பிற மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், அரசு சாா்பில் அவா்களுக்குத் தேவையான பயிற்சிகள் அளிக்கப்படும்.

சித்த மருத்துவப் பல்கலைக்கழகம்:

சென்னையை அடுத்துள்ள மாதவரத்தில், 25 ஏக்கரில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சித்த மருத்துவத்துக்கான நல வாழ்வு மையங்கள் அமைப்பதற்கு மத்திய அரசு ரூ. 12.98 கோடி நிதியை வழங்கியுள்ளது.

தேனி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்த மருத்துவமனை தொடங்கப்படவுள்ளது என்றாா் அவா்.

ஆய்வின் போது, அமைச்சா்கள் ஐ. பெரியசாமி, அர. சக்கரபாணி, மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் ஆகியோா் உடனிருந்தனா்.

திருப்பரங்குன்றத்தில்...

முன்னதாக, சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த அமைச்சா், விமான நிலையத்தில் கரோனா தடுப்பூசி முகாமைத் தொடக்கி வைத்து கூறியதாவது:

389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் பள்ளி மாணவா்கள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு, காய்ச்சல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆரம்பத்தில் 300-க்கும் மேற்பட்டவா்களுக்கு இருந்த வைரஸ் காய்ச்சல், தற்போது 30-க்கும் கீழாக குறைந்தது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.