வத்தலக்குண்டிலிருந்து நெல்லைக்கு வெங்காயம் விற்க வந்த அண்ணன், தம்பி கொலை
By DIN | Published On : 17th June 2022 02:32 PM | Last Updated : 06th July 2022 03:14 PM | அ+அ அ- |

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டிலிருந்து நெல்லைக்கு வெங்காயம் விற்க வந்த அண்ணன், தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காமராஜர்புரத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவர் பேரூராட்சி தூய்மைப் பணியாளர். இவருடைய மகன்கள் மணிகண்டன் (வயது 25) மற்றும் சபரீஸ்வரன் (13). மணிகண்டன் லோடு ஆட்டோவில் ஊர் ஊராக சென்று வெங்காயம் வியாபாரம் செய்து வந்தார்.
கடந்த 1-ந்தேதி நெல்லைக்கு வெங்காயம் விற்க வந்த அவருக்கு உதவியாக தம்பி சபரீஸ்வரனும் வந்திருந்தார். இவர்கள் சுத்தமல்லி பகுதியில் தங்கி இருந்து வெங்காயம் வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர்களது உறவினர்கள் செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டும் பதில் இல்லாததால் அவரது தந்தை நாகராஜ் மற்றும் உறவினர்கள் சுத்தமல்லி பகுதிக்கு வந்து தேடியுள்ளனர்.
இதையும் படிக்க:உயர் நீதிமன்றம் உத்தரவு: நளினி ஏமாற்றம்!
அப்போது திருப்பணி கரிசல்குளம் குளக்கரையில் அவர்களது லோடு ஆட்டோ மட்டும் நின்று கொண்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். ஆனால் அவர்கள் பற்றிய விவரம் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து நாகராஜ் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆய்வாளர் ஜீன்குமார் வழக்குப்பதிவு செய்து மாயமான அண்ணன், தம்பியை தேடினர்.
இந்த நிலையில் கொண்டாநகரம் ரயில்வே கேட் டாஸ்மாக் அருகே உள்ள காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் அவர்களது உடல்கள் இன்று கண்டெடுக்கப்பட்டது. உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இது சம்பந்தமாக சுத்தமல்லி ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த சுப்பையா மகன்கள் சதீஷ் குமார் (23) மற்றும் அவரது தம்பி பார்த்திபன்(22) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு சுத்தமல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.