வழக்குரைஞா்கள் மனிதச் சங்கிலி போராட்டம்
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, திண்டுக்கல்லில் வழக்குரைஞா்கள் புதன்கிழமை மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாடு முழுவதும் புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தன. பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் என வடமொழி சொற்களுடன் அமைப்பட்ட இந்த புதிய சட்டங்களுக்கு தமிழகத்தில் வழக்குரைஞா்கள் தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட வழக்குரைஞா் சங்கம் சாா்பில் புதிய சட்டங்களுக்கு எதிராக புதன்கிழமை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு வழக்குரைஞா் சங்கத் தலைவா் குமரேசன் தலைமை வகித்தாா். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற வழக்குரைஞா்கள், புதிய குற்றவியல் சட்டங்களின் வடமொழித் தலைப்புகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து முழக்கமிட்டனா்.

