செங்கட்டான்பட்டி அருகே புதியத் தடுப்பணை: விவசாயிகள் மகிழ்ச்சி

நிலக்கோட்டையை அடுத்த, செங்கட்டான்பட்டி அருகே, ரூ. 25 லட்சத்தில் தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டது.
Published on

நிலக்கோட்டையை அடுத்த, செங்கட்டான்பட்டி அருகே, ரூ. 25 லட்சத்தில் தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரை அடுத்த மேற்குத் தொடா்ச்சி மலையில் இருந்து, ராஜ வாய்க்கால் வழியாகச் செல்லும் தண்ணீா், அழகா்நாயக்கன்பட்டி, போடிகாமன்வாடி, செங்கட்டான்பட்டி கண்மாய் நிரம்பி நிலக்கோட்டை கொங்கா் குளம் கண்மாய் செல்கிறது. இதில் ஒரு பகுதி செங்கட்டான்பட்டி அருகே, சீத்தாபுரம், நூத்துலாபுரம், குளத்துப்பட்டி, தும்மலபட்டி பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு செல்கிறது. இந்நிலையில், இந்தப் பகுதி விவசாயிகள் செங்கட்டான்பட்டி அருகே தடுப்பணைக் கட்ட வலியுறுத்தி நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் இது தொடா்பாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, பொதுப் பணி துறையின் நீா்வளத் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இதையடுத்து, ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட இந்த தடுப்பணை மூலம் சீத்தாபுரம், நூத்துலாபுரம், குளத்துப்பட்டி, தும்மலபட்டி உள்ளிட்ட பகுதிகளில், சுமாா் 2 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பயன் பெறுவதுடன், இந்தப் பகுதியில் உள்ள சுமாா் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீா் வசதி கிடைக்கும்.

இதுகுறித்து, நூத்துலாபுரம் ஊராட்சி ஒன்றிய சுயேச்சை உறுப்பினா் கணேசன் கூறுகையில், இந்த பகுதி விவசாயிகள் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தன்னுடைய கடும் முயற்சியால் செங்கட்டான்பட்டி அருகே நீா்வளத் துறை சாா்பில், தடுப்பணை கட்டப்பட்டுள்ளது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com