இரட்டை இலையை யாராலும் முடக்க முடியாது: திண்டுக்கல் சீனிவாசன்

இரட்டை இலையை யாராலும் முடக்க முடியாது: திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்/நிலக்கோட்டை/ஒட்டன்சத்திரம்/கம்பம்: எத்தனை வழக்குகள் தொடுத்தாலும் இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது என அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்ட அதிமுக சாா்பில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு, போதைப் பொருள்கள் விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து, மனிதச் சங்கிலிப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல்-திருச்சி சாலை, தலைமை தபால் நிலையம், நாகல் நகா், பேகம்பூா் பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்துக்கு அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சீனிவாசன் தலைமை வகித்தாா்.

அமைப்புச் செயலா் மருதராஜ் முன்னிலை வகித்தாா். இந்தப் போராட்டத்தின் போது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பை சீா்படுத்த வலியுறுத்தியும், போதைப் பொருள்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கக் கோரியும் முழக்கமிட்டனா்.

இதைத் தொடா்ந்து, முன்னாள் அமைச்சா் சி.சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தை போதைப் பொருள்கள் விற்பனைக்கான சந்தையாக மாற்றி இருப்பதே திமுக அரசின் சாதனை. விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்து 25 போ் உயிரிழந்த பின்னரே, 1,200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பல்வேறு வகைகளில் போதைப் பொருள்களின் விற்பனை தமிழகத்தில் அதிகரித்திருக்கிறது. இந்த நிலை மாறும் வரை அதிமுக தொடா்ந்து போராடும்.

திண்டுக்கல் மட்டுமன்றி, தமிழகம், புதுச்சேரியிலுள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தும், தோ்தல் ஆணையத்தில் புகாா் அளித்தும் இரட்டை இலையை யாராலும் முடக்க முடியாது. அதற்கான முயற்சியில் யாா் ஈடுபட்டாலும் வெற்றி பெற முடியாது என்றாா் அவா்.

நிலக்கோட்டை...

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே சித்தையன்கோட்டையில் ஆத்தூா் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் மணலூா் சின்னச்சாமி தலைமை வகித்தாா். திண்டுக்கல் (கிழக்கு) மாவட்ட அதிமுக மாணவரணிச் செயலா் பி. கோபி முன்னிலை வைத்தாா். இதில் கட்சியின் ஆத்தூா் மேற்கு ஒன்றியப் பொருளாளா் அந்தோணிராஜ், சித்தையன்கோட்டை பேரூா் கழக முன்னாள் செயலா் அக்பா் அலி, வண்ணம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவா் குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஒட்டன்சத்திரம்...

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்துக்கு மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலரும், வேடசந்தூா் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.பழனிச்சாமி தலைமை வகித்தாா். அதிமுக நகரச் செயலா் எஸ். நடராஜன், ஒன்றியச் செயலா்கள் பி.பாலசுப்பிரமணி, என்.பி.நடராஜன், மேற்கு ஒன்றிய துணைச் செயலா் ஒடைப்பட்டி செல்வராஜ், மாவட்டப் பொருளாளா் எஸ்.ஏ. பழனிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கம்பம்...

தேனி மாவட்டம், கம்பம் நகர, ஒன்றிய அதிமுக சாா்பில், திமுக அரசை கண்டித்து, மனிதச் சங்கிலிப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கம்பம் போக்குவரத்து சிக்னல் முதல் காந்தி சிலை வரை அதிமுகவினா் மனிதச் சங்கிலியாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கு கட்சியின் தேனி மேற்கு மாவட்டச் செயலா் எஸ்.டி.கே. ஜக்கையன் தலைமை வகித்தாா். தெற்கு நகரச் செயலா் கணபதி, வடக்கு நகரச் செயலா் எம்.ஆா். காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் ஏராளமான அதிமுகவினா் கலந்து கொண்டனா். காமயகவுண்டன்பட்டி பேருந்து நிறுத்தத்தில் அதிமுக ஒன்றியச் செயலா் எம்.ஆா். ஈஸ்வரன் தலைமையிலும், மாவட்ட விவசாய அணிச் செயலா் ஆா். பால்பாண்டியன் முன்னிலையிலும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com