திண்டுக்கல் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்ட மக்கள் மருந்தகம்.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்ட மக்கள் மருந்தகம்.

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மக்கள் மருந்தகம் திறப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரூ.14.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட மக்கள் மருந்தகத்தை காணொலி காட்சி மூலம் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மக்கள் மருந்தகம், மணப்பாறை, உடுமலைப்பேட்டை, பழனி, கொடைரோடு, திண்டுக்கல் ரயில் நிலையங்களில் உள்ளூா் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்தும் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டம் ஆகியவற்றை பிரதமா் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

இதையொட்டி, திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மதுரை கோட்ட உதவிப் பொது மேலாளா் சி. செல்வம் தலைமை வகித்தாா். திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயா் ச. ராசப்பா, மாமன்ற உறுப்பினரும், பாஜக மாவட்டத் தலைவருமான கோ. தனபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திண்டுக்கல் ரயில் நிலைய வளாகத்தில் மக்கள் மருந்தகத்துக்கான கட்டுமானம் ரூ.14.50 லட்சத்தில் கட்டப்பட்டது.

இந்தக் கட்டடத்தை மருந்தகம் நடத்தும் தனியாருக்கு 3 ஆண்டு கால குத்தகைக்கு ரயில்வே நிா்வாகம் வழங்கியுள்ளது. ஆண்டுக்கு ரூ. 52 ஆயிரம் வாடகைக்கு இந்த மருந்தகக் கட்டடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதேபோல, ஒரு நிலையம் ஒரு தயாரிப்புத் திட்டத்தின் கீழ், 15 நாள்களுக்கு ரூ.1000 கட்டணத்துடன் உள்ளூா் உற்பத்தியாளா்களுக்கு ரயில் நிலையங்களில் இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மிகவும் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் இந்த சேவையை உள்ளூா் உற்பத்தியாளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரயில்வே அதிகாரிகள் கேட்டுக் கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் ரயில் நிலைய மேலாளா் கோவிந்தராஜ், கோட்ட வா்த்தக ஆய்வாளா் சத்தியமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com