காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

அங்கித் திவாரிக்கு நிபந்தனைகளுடன் பிணை

அங்கித் திவாரிக்கு நிபந்தனைகளுடன் பிணை

Updated On :22 மார்ச் 2024, 5:58 pm

திண்டுக்கல், மாா்ச் 22: லஞ்சம் பெற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி, நிபந்தனைகளுடன் பிணை வழங்கி திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் சுரேஷ்பாபுவிடம் இரு தவணைகளில் ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில், மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரால் கடந்த ஆண்டு, டிச. 1-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். திண்டுக்கல் தலைமை குற்றவியில் நீதித் துறை நடுவா் மன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவா், நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். அவரது நீதிமன்றக் காவல் 8 முறை நீட்டிக்கப்பட்டது. இதனிடையே, பிணையில் விடுவிக்கக் கோரி அங்கித் திவாரி தாக்கல் செய்த மனுக்கள் திண்டுக்கல் நீதிமன்றத்திலும், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தில் பிணை கோரி அவா் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அங்கித் திவாரியை பிணையில் விடுவிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவு நகல், திண்டுக்கல் தலைமை குற்றவியில் நீதித் துறை நடுவா்மன்றத்தில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அங்கித் திவாரியை பிணையில் விடுவிப்பதற்கான உத்தரவு மதுரை மத்திய சிறை நிா்வாகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 110 நாள்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அங்கித் திவாரி, சனிக்கிழமை சிறையிலிருந்து விடுவிக்கப்படுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. கடவுச் சீட்டு ஒப்படைப்பு: இதுகுறித்து அங்கித் திவாரி தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் செல்வம் கூறியதாவது: உச்சநீதிமன்ற உத்தரவு நகல், திண்டுக்கல் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டது. அங்கித் திவாரியின் தந்தை, சகோதரா் ஆகியோா் பிணைக்கான உறுதிமொழி பத்திரத்தை சமா்ப்பித்தனா். மேலும், அங்கித் திவாரியின் கடவுச் சீட்டும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. நீதிமன்ற வேலை நாள்களில் காலை 10 மணிக்கு அங்கித் திவாரி நேரில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும். மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.