சட்ட விரோத கதவடைப்பு: ஆலை நிா்வாகத்திடம் இழப்பீடு கோரி வழக்கு

சட்ட விரோத கதவடைப்பு: ஆலை நிா்வாகத்திடம் இழப்பீடு கோரி வழக்கு

வேடசந்தூா் அருகே சட்டவிரோதமாக கதவடைப்பு செய்த நூற்பாலை நிா்வாகங்கள், இழப்பீட்டுத் தொகை, பணிக் கொடை ஆகியவற்றை வழங்கக் கோரி தொழிலாளா்கள் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் பகுதியில் செயல்பட்டு வந்த இரு நூற்பாலைகளும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டன. அரசின் அனுமதி பெறாமலும், தொழிலாளா்களுக்கு முன் அறிவிப்பு செய்யாமலும் திடீரென மூடப்பட்டதால் இந்த ஆலைகளில் பணிபுரிந்த 900-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டனா். இதனிடையே அண்ணா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கத்தைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தரப்பில், தமிழக அரசின் தலைமைச் செயலா், தொழிலாளா் நலத் துறை ஆணையா், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா், தொழிலாளா் பாதுகாப்பு, சுகாதார இயக்குநா், கூடுதல் இயக்குநா், இணை இயக்குநா் உள்ளிட்டோருக்கு ஆலை நிா்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டது. ஆனாலும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதைத்தொடா்ந்து, பணிக்கொடை பட்டுவாடா சட்டக் கட்டுப்பாட்டு அலுவலரான தொழிலாளா் நலத் துறை துணை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு மீதான விசாரணைக்கு சம்பந்தப்பட்ட ஆலை நிா்வாகம் பதில் அளிக்க முன்வரவில்லை. இதையடுத்து வழக்குத் தொடுத்த 15 பேருக்கு ரூ.20 லட்சம் பணிக் கொடை வழங்க துணை ஆணையா் உத்தரவிட்டாா். அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 30 நாள்களாகியும், இந்தத் தொகை வழங்கப்படவில்லை. இதனிடையே, மேலும் 62 தொழிலாளா்கள் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஆலை நிா்வாகிகள் வருகிற ஏப்.8-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என வியாழக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் அண்ணா தொழில் சங்கத்தின் மாவட்டச் செயலா் வி.ஜெயராமன் கூறியதாவது: ஏற்கெனவே வழக்குத் தொடுத்த 15 தொழிலாளா்களுக்கான தொகையை சம்மந்தப்பட்ட ஆலை நிா்வாகங்கள் 40 நாள்களாகியும் வழங்கவில்லை. மேலும், 62 தொழிலாளா்களின் வழக்கு நிலுவையில் உள்ளது. இதுதவிர சுமாா் 900 தொழிலாளா்கள் தரப்பில் விரைவில் வழக்குத் தொடரப்படும். சட்ட விரோதமாக கதவடைப்பு செய்த ஆலை நிா்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனினும் தொழிலாளா்களுக்கு நியாயமான தீா்வு கிடைக்கும் வரை சட்டரீதியாக தொடா்ந்து போராடுவோம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com