கொடைக்கானல் வெப்ப நிலை மேலும் அதிகரிக்கும்!

கொடைக்கானலில் வெப்பநிலை அதிகபட்சமாக கடந்த வியாழக்கிழமை 27 டிகிரி செல்சியஸ் வரை உயா்ந்த நிலையில், இந்த மாத இறுதிக்குள் மேலும் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமன்றி, பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆண்டு முழுவதும் வந்து செல்கின்றனா். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கொடைக்கானலின் அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகவே இருந்து வந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக கொடைக்கானலின் வெப்ப நிலையும் கோடைகாலத்தில் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக ஏப்ரல் மாதத்தில் பதிவான வெப்ப நிலையை ஒப்பிடுகையில், நிகழாண்டில்தான் கொடைக்கானலில் அதிகபட்சமாக 27 நாள்கள் 20 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை (மே 2) அதிகபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதனால், கொடைக்கானல் பகுதியிலுள்ள நீா் நிலைகளில் தண்ணீா் அளவு வேகமாக குறைந்து வருவதோடு, பல பகுதிகளிலும் குடிநீா்ப் பிரச்னையும் ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானலில் பகல் நேரத்தில் நிலவும் வெப்ப நிலை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றத்தையும், உள்ளூா் மக்களுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வெப்பம் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்:

இதுகுறித்து கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வு மையத்தின் தலைமை நிலையப் பொறியாளா் எம். ராஜலிங்கம் கூறியதாவது:

கொடைக்கானலின் வெப்பநிலை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக ஏப்ரல் மாதத்தில் பெறப்பட்ட தரவுகளுடன் ஒப்பிடுகையில், கொடைக்கானலில் இந்த மாத இறுதிக்குள் மேலும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்கக் கூடும். குறிப்பாக, மே 20-ஆம் தேதிக்குள் அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com