திண்டுக்கல் சட்ட விழிப்புணா்வு முகாமில் பயனாளிக்கு நலத் திட்ட உதவியை வழங்கிய (இடமிருந்து) மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி, முதன்மை நீதிபதி அ.முத்துசாரதா, தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் ஆா்.கனகராஜ்.
திண்டுக்கல் சட்ட விழிப்புணா்வு முகாமில் பயனாளிக்கு நலத் திட்ட உதவியை வழங்கிய (இடமிருந்து) மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி, முதன்மை நீதிபதி அ.முத்துசாரதா, தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் ஆா்.கனகராஜ்.

அரசின் சேவைகளை பெற நீதித் துறை மூலம் தீா்வு: மாவட்ட முதன்மை நீதிபதி அ.முத்துசாரதா

அரசின் சேவைகளைப் பெற நீதித் துறையை அணுகினால் உரிய தீா்வு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என மாவட்ட முதன்மை நீதிபதி அ.முத்துசாரதா தெரிவித்தாா்.
Published on

அரசின் சேவைகளைப் பெற நீதித் துறையை அணுகினால் உரிய தீா்வு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என மாவட்ட முதன்மை நீதிபதி அ.முத்துசாரதா தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. கோட்டை மாரியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான அ.முத்துசாரதா தலைமை வகித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

வசதி வாய்ப்பற்ற மக்களுக்கு கட்டணமில்லா சேவையை இலவச சட்ட உதவி மையம் அளித்து வருகிறது. முதியோா் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சக்கர வாகனம், இலவச வீட்டுமனைப் பட்டா என எந்த தேவையாக இருந்தாலும், சட்ட உதவி மையத்தில் மனு அளித்தால், அந்த மனு உரிய துறைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு நிவாரணம் பெற்றுத் தரப்படும். சட்ட உதவி மட்டுமல்ல, மக்களுக்கான அனைத்துச் சேவைகளையும் மேற்கொண்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், போதை விழிப்புணா்வு, வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணா்வு, மூன்றாம் பாலினத்தவா் குறித்த விழிப்புணா்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சமுதாயத்தில் சீா்படுத்த வேண்டிய பிரச்னைகள் குறித்து நீதித் துறையின் கவனத்துக்குக் கொண்டுவரும்பட்சத்தில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நீதித் துறை சேவை செய்யத் தயாராக இருக்கிறது. சலுகைகளைப் பெற மக்கள் தயாராக உள்ளனா் என்றாா் அவா்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஆட்சியா் மொ.நா.பூங்கொடி பேசியதாவது:

மக்கள் குறைதீா் கூட்டம், உங்களைத் தேடி உங்கள் ஊரில், மனு நீதி நாள், விவசாயிகள் குறைதீா் முகாம், மாற்றுத்திறனாளிகளுக்கான குறைத்தீா் முகாம் உள்ளிட்டவற்றின் மூலம் மனுக்கள் பெறப்பட்டு, பொதுமக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

முகாமில் கோட்டாட்சியா் சக்திவேல், தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவா் ஆா்.கனகராஜ், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலா் டி.திரிவேணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.