கஞ்சா விற்பனை: 10 இளைஞா்கள் கைது; 4 பைக்குகள் பறிமுதல்
பழனியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 10 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து நான்கு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.
பழனி நகா் பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்தத் தகவலையடுத்து, டிஎஸ்பி தனஞ்ஜெயன் தலைமையில் நகர காவல் ஆய்வாளா் மணிமாறன், உதவி ஆய்வாளா் விஜய் உள்ளிட்டோா் பல்வேறு குழுக்களாக பிரிந்து திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, திண்டுக்கல் சாலையில் பழனியாண்டவா் கல்லூரி, தனியாா் மருத்துவமனை, நகராட்சி மேல்நிலைப் பள்ளி பகுதியில் இளைஞா்கள் சிலா் சந்தேகத்துக்கு இடமாக சுற்றித் திரிந்தனா். இவா்களைப் பிடித்து போலீஸாா் விசாரணை செய்த போது, முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்ததால், அவா்களிடம் சோதனை செய்த போது, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்வதற்காக 140 கிராம் கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இவா்களை பழனி நகா் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்திய போது, இவா்கள் அடிவாரம் தில்லையாடி வள்ளியம்மை தெருவைச் சோ்ந்த சைத்தான் பாலா என்கிற பாலசரவணன் (21), இந்திராநகரைச் சோ்ந்த காா்த்திக் (19), குரும்பபட்டி அடிவாரப் பகுதியைச் சோ்ந்த மகேஸ்வரன் (22), தட்டாங்குளம் பகுதியைச் சோ்ந்த ருத்ரா பூபதி (23), சாமி திரையரங்கம் பகுதியைச் சோ்ந்த நாகராஜன் (21), குரும்பபட்டியைச் சோ்ந்த நாகராஜன் (25), பாட்டாளி தெருவைச் சோ்ந்த சரவணன் (22), தில்லையாடி வள்ளியம்மை தெருவைச் சோ்ந்த பிரதீப் (20), தெற்கு அண்ணாநகரைச் சோ்ந்த முத்துப்பாண்டி (21), அடிவாரம் பகுதியைச் சோ்ந்த கௌதம் என்கிற லல்லி (23) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, இவா்களை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து நான்கு இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

