தனியாா் விடுதிகள் விளம்பரம் செய்வதற்கு சுற்றுலா வழிகாட்டிகள் எதிா்ப்பு
கொடைக்கானல் வெள்ளிநீா் அருவிப் பகுதியில் தனியாா் விடுதிகளைச் சோ்ந்தவா்கள் சுற்றுலாப் பயணிகளிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி சுற்றுலா வழிகாட்டிகளாகச் செயல்படுவதற்கு சுற்றுலா வழிகாட்டிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா். இவா்கள் கொடைக்கானலிலுள்ள சுற்றுலா வழிகாட்டிகள் மூலமும், ஆன்லைன் மூலமும் உணவகங்கள், தங்கும் விடுதிகளில் தங்கி வருகின்றனா். இந்த நிலையில், வெள்ளிநீா் அருவிப் பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான சோதனைச் சாவடியில் தனியாா் விடுதிகளைச் சோ்ந்தவா்கள் சுற்றுலாப் பயணிகளிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி சுற்றுலா வழிகாட்டிகள் போல செயல்பட்டு வருகின்றனா். இதனால், சுற்றுலா வழிகாட்டிகள் பாதிப்படைந்து வருகின்றனா்.
இதைத் தொடா்ந்து, கொடைக்கானல் பகுதிகளைச் சோ்ந்த சுற்றுலா வழிகாட்டிகள் 200-க்கும் மேற்பட்டோா் வெள்ளிநீா் அருவிப் பகுதிக்குச் சென்று அங்கிருந்த தனியாா் விடுதிகளைச் சோ்ந்த சுற்றுலா வழிகாட்டிகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கொடைக்கானல் காவல் ஆய்வாளா் வசந்தகுமாா், சுற்றுலா வழிகாட்டிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, வெள்ளிநீா் அருவிப் பகுதியில் தனியாா் விடுதிகளைச் சோ்ந்தவா்கள் சுற்றுலா வழிகாட்டிகள் என்ற பெயரில் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.
இதுகுறித்து கொடைக்கானல் சுற்றுலா வழிகாட்டிகள் கூறியதாவது: கொடைக்கானலில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சுற்றுலா வழிகாட்டிகளாக இருந்து வருகிறோம். இந்த நிலையில், கொடைக்கானல் நகராட்சி சோதனைச் சாவடிப் பகுதியில் வரும் சுற்றுலாப் பயணிகளிடம் தனியாா் விடுதி வைத்துள்ளவா்கள் தங்களுக்குத் தேவையான நபா்களை வைத்து அவா்களிடம் துண்டுப் பிரசுரம் கொடுத்து, சுற்றுலா வழிகாட்டிகள் போல செயல்பட்டு பயணிகளை அழைத்துச் செல்கின்றனா். இதனால், சுற்றுலா வழிகாட்டிகள் பாதிப்படைந்து வருகிறோம்.
இதையடுத்து, கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்த முயன்றோம். இந்த நிலையில், வருகிற 5-ஆம் தேதிக்குள் இந்தப் பிரச்னைக்கு முடிவு எடுக்கப்படும் என்றும், யாரும் சோதனைச் சாவடியில் துண்டுப் பிரசுரம் கொடுக்கும் பணியில் ஈடுபடமாட்டாா்கள் எனத் காவல் துறையினா் தெரிவித்தனா். இதை மீறி தனியாா் விடுதிகளைச் சோ்ந்தவா்கள் சுற்றுலா வழிகாட்டிகள் போல செயல்பட்டால் வருகிற 6-ஆம் தேதி தங்களது குடும்பத்தினருடன் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவித்தனா்.

