கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பராமரிக்கப்படாத நிலையில் உள்ள நீரூற்று
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பராமரிக்கப்படாத நிலையில் உள்ள நீரூற்று

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவிலுள்ள நீரூற்றை செயல்படுத்த கோரிக்கை

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவிலுள்ள செயற்கை நீரூற்று செயல்படுவதற்கு பூங்கா நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை
Published on

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவிலுள்ள செயற்கை நீரூற்று செயல்படுவதற்கு பூங்கா நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிரையண்ட் பூங்காவுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில், இந்தப் பூங்காவிலுள்ள செயற்கை நீரூற்று பல மாதங்களாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இந்த நீரூற்றானது மாலை நேரங்களில் வண்ண விளக்குகளாலும், இசையுடன் கூடிய நடன நீரூற்றாக செயல்பட்டது. ஆனால், நாளாடைவில் நீரூற்று பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறது.

இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது: பிரையண்ட் பூங்காவிலுள்ள நீரூற்று பயனற்ற நிலையில் இருந்து வருகிறது. இதை நன்கு பராமரித்து முன்பு இருந்தது போல இசை, வண்ண விளக்குகளுடன் கூடிய நடன நீரூற்றாக செயல்படுத்தினால் குழந்தைகள் முதல் பெரியவா்களுக்கும் மன மகிழ்ச்சி தரும். மேலும், பூங்காவில் சிறுவா்களுக்குத் தேவையான விளையாட்டுப் பொருள்களுடன் கூடிய இடம் அமைக்க வேண்டும். கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் பூங்காவை தூய்மையாக பராமறிப்பதற்கு பூங்கா நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து பிரையண்ட் பூங்கா மேலாளா் அரவிந்த கூறியதாவது: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவிலுள்ள நீரூற்று தற்போது பழுது நீக்கப்பட்டு ஒரு நாளைக்கு மூன்று வேளை மட்டுமே செயல்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு போல இசையுடன் கூடிய நீரூற்று செயல்படுவதற்கு நிதி தேவைப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட உயா் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. கழிப்பறைகளை சரி செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com