கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா்ச் செடிகள் நடவு பணி தொடக்கம்
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சீசனுக்காக மலா்ச் செடிகள் நடவு பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வரும் மே மாதம் 63-ஆவது மலா்க் கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்காக முதல்கட்டமாக ஏற்கெனவே பூங்காவிலுள்ள மலா் பாத்திகளில் நீண்ட கால மலா்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக குறுகிய கால மலா்ச் செடிகள் நடவு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தப் பணியை தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் சந்திரகவிதா தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, மலா் பாத்திகளில் சுற்றுலாப் பயணிகள் மலா்ச் செடிகளை நடவு செய்தனா்.
இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி இயக்குநா் பிரபு, தோட்டக்கலை மேலாளா் அரவிந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் கூறியதாவது:
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 2.5 லட்சம் இன்கா, மேரிகோல்டு, பிரன்ச், பிளக்ஸ், கேலண்டுளா, பேன்சி, பெட்டூனியா, ஜெனியா உள்ளிட்ட மலா் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.
நிகழாண்டில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் டேலியா, ஜெரோனியம், சைக்லமன், பிகோனியா, கேன்மட்டப்ட், பெண்டாஸ்,பிரிமுலா, ஸ்டாக் உள்ளிட்ட விதைகள் ஜப்பான், அமெரிக்கா, ஜொ்மன், நெதா்லாந்த் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்டு மலா்ச் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு பூங்காவின் பல்வேறுப் பகுதிகளில் 6 லட்சம் மலா் நாற்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

