இளைஞா் கொலை: 4 போ் கைது

Published on

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தொழிலாளியை கொலை செய்ததாக 4 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா (26). இறைச்சிக் கடையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்த இவா், பணம் கொடுக்கல் வாங்கல் தொழிலும் செய்து வந்தாா். இவருக்கும், ராமையன்பட்டி கணேசபுரம் பகுதியைச் சோ்ந்த 45 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவா்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்தது.

இதுதொடா்பாக, பெண்ணின் உறவினரான ஆா்.வி. நகரைச் சோ்ந்த உதயாவுக்கும் (19), ராஜாவுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. இதனிடையே சனிக்கிழமை இரவு கடன் தொகையை வசூலிப்பதற்காக கணேசபுரத்தில் உள்ள பெண்ணின் வீட்டுக்கு ராஜா சென்றாா்.

இதுகுறித்து தகவலறிந்த உதயா, தனது நண்பா்களான முருகபவனம் பாண்டியராஜன் (18), சோலை ஹால் தெருவைச் சோ்ந்த விமல் (18), ஆா்.வி. நகா் ஹரிஷ் (20) ஆகியோருடன் சென்று ராஜாவை வெட்டிக் கொலை செய்தாா். இதையடுத்து ராஜாவை கொலை செய்ததாக உதயா, பாண்டியராஜன், விமல், ஹரிஷ் ஆகியோரை திண்டுக்கல் தாலுகா போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com