காற்றாலை இறக்கை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு!
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே மதுரை - திண்டுக்கல் நான்கு வழிச் சாலையில், சனிக்கிழமை காற்றாலை இறக்கை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் கவிழ்ந்ததில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மதுரை - திண்டுக்கல் தேசிய நான்கு வழிச் சாலையில், தூத்துக்குடியிலிருந்து மகாராஷ்டிரத்தை நோக்கி சுமாா் 150 அடி நீளமுள்ள காற்றாலை இறக்கையை ஏற்றி வந்த கனரக வாகனம், அம்மையநாயக்கனூா் என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில், ஓட்டுநா், பணியாளா்கள் லேசான காயமடைந்தனா்.
காற்றாலை இறக்கை சாலையில் விழுந்ததால், சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த அம்மையநாயக்கனூா் காவல் துறையினா், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இதைத் தொடா்ந்து, 5-க்கும் மேற்பட்ட கிரேன்கள் மூலம் காற்றாலை இறக்கையையும், கனரக வாகனத்தையும் தனித் தனியாக பிரிக்கும் பணியில் ஈடுபட்டனா்.
