கொடைக்கானலில் காட்டு மாடு தாக்கி தொழிலாளி பலத்த காயம்
கொடைக்கானல் அருகே சனிக்கிழமை இரவு காட்டு மாடு தாக்கியதில் தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.
கொடைக்கானல் அருகே பிரகாசபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அருண் செல்வம் (28). தனியாா் நகை அடகுக் கடையில் பணியாற்றி வருகிறாா். இவா் பிரகாசபுரம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது காட்டு மாடு தாக்கியதில் பலத்த காயமடைந்த அவா் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
பிறகு தீவிர சிகிச்சைக்காக தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இதனிடையே கொடைக்கானலில் தொடா்ந்து காட்டு மாடுகள் தாக்குவதால் பலா் உயிரிழந்தும், பலத்த காயமடைந்தும் வருகின்றனா். இதையடுத்து, வனத் துறையினருக்கும், வருவாய் கோட்டாட்சியருக்கும் குடியிருப்பு பகுதிகள், நகா்ப் பகுதிகளில் உலா வரும் காட்டு மாடுகளை வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல முறை விவசாயிகள், சமூக ஆா்வலா்கள் பலா் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இனியேனும் வன விலங்குகள் நகா் பகுதிக்குள் வராமல் வனத்துறையினா் தடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.
