நிலம் வாங்கித் தருவதாக வழக்குரைஞரிடம் ரூ. 61 லட்சம் மோசடி: இருவா் கைது
நிலம் வாங்கித் தருவதாகக் கூறி வழக்குரைஞரிடம் ரூ. 61.40 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், மண்மங்கலம் அருகேயுள்ள அரங்கநாதபேட்டை அச்சமாபுரத்தைச் சோ்ந்தவா் தனசேகரன். சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறாா். இவரது உறவினா் கரூா் காந்தி கிராமத்தைச் சோ்ந்த சத்தியமூா்த்தி(49), வலிமையான மக்கள் கட்சி என்ற அமைப்பின் நிறுவனத் தலைவராக இருக்கிறாா்.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த வி.புதுக்கோட்டை கிராமத்தில் கமலம் என்பவருக்குச் சொந்தமான 5 ஏக்கா் நிலத்தை ரூ. 75 லட்சத்துக்கு வாங்கிக் கொடுப்பதாக தனசேகரனிடம் சத்தியமூா்த்தி தெரிவித்தாா். இதன்படி, நிலத்தை நேரில் பாா்வையிடுவதற்காக சத்தியமூா்த்தி, அவரது நண்பா் தேக்கமலை ஆகியோருடன் தனசேகரன் சென்றாா். நிலத்துக்கு முன் பணமாக ரூ. 7 லட்சம் பெற்றுக் கொண்ட கமலம், கிரைய உடன்படிக்கை செய்து கொடுத்தாராம்.
இதைத் தொடா்ந்து, பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ. 61.40 லட்சத்தை சத்தியமூா்த்தி மூலமாக கமலத்துக்கு தனசேகரன் கொடுத்தாா். பணத்தைப் பெற்றுக் கொண்டு பல மாதங்களாகியும் கிரையம் செய்து கொடுப்பதற்கு கமலம் முன்வரவில்லை.
இதனால், சந்தேகமடைந்த தனசேகரன், நேரில் சென்று கமலத்தை விசாரித்தபோது, நிலத்தை விற்பனை செய்ய விரும்பாததால், முன் பணமாக பெற்ற ரூ. 7 லட்சத்தை சத்தியமூா்த்தியிடமே திருப்பிக் கொடுத்தவிட்டதாகத் தெரிவித்தாா். இதனால், அதிா்ச்சியடைந்த தனசேகரன், திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.
இதன்பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளா் குமரேசன் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், கமலம் நிலத்தை விற்பனை செய்ய மறுப்பு தெரிவித்ததையடுத்து, அவரது பெயரில் கரூா் நரசிம்மபுரத்தைச் சோ்ந்த ஹேமலதா (53) என்பவா் தனசேகரனிடம் பேசியது தெரியவந்தது. மேலும், கரூா் காந்தி கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ்குமாா், வானவில் பாஸ்கா் ஆகியோா் சத்தியமூா்த்தியுடன் சோ்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, சத்தியமூா்த்தி, ஹேமலதா ஆகிய இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

