கொடைக்கானல் பில்லர்ராக் பகுதியில் காணப்பட்ட சுற்றுலாப் பயணிகள்.
கொடைக்கானல் பில்லர்ராக் பகுதியில் காணப்பட்ட சுற்றுலாப் பயணிகள்.

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்

Published on

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் கொடைக்கானலில் கடந்த சில தினங்களான பனிப் பொழிவு காணப்படுகிறது. இந்த சூழலை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட வடமாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோா் கொடைக்கானலுக்கு வருகின்றனா்.

ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல்: இவா்களில் பெரும்பாலானோா் வாகனங்களில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வழக்கமாக பெருமாள்மலையிலிருந்து கொடைக்கானல் வரையிலான 12 கி.மீ. தொலைவை 15 நிமிஷங்களில் கடக்கலாம். ஆனால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் இரண்டு மணி நேரம் ஆகிறது. இதற்கு முக்கிய காரணம் மலைச் சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமித்து கடைகள்அமைக்கப்பட்டுள்ளன.

 கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச்சாலையான மூஞ்சிக்கல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுற்றுலா வாகனங்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.
கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச்சாலையான மூஞ்சிக்கல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுற்றுலா வாகனங்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

இதனிடையே சிலா் சீனிவாசபுரம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனா். இவற்றை நெடுஞ்சாலைத் துறையினா் அகற்ற முடியாமல் தவிக்கின்றனா்.

ஏரிச்சாலை முதல் பெருமாள்மலை வரை வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் அவதியடைகின்றனா். இதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வரை சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களால் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் சொந்த ஊா்களுக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் அவதியடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com