தம்பதியைக் கட்டிப்போட்டு 18 பவுன் நகை, பணம் கொள்ளை
ஒட்டன்சத்திரம் அருகே தம்பதியைக் கட்டிப்போட்டு 18 பவுன் நகை, ரூ.38 ஆயிரம் ரொக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தையம் தும்மிச்சிபாளையத்தைச் சோ்ந்த விவசாயி கருப்புச்சாமி (50). இவரது மனைவி ராஜலட்சுமி. இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனா்.
கணவன்-மனைவி இருவரும் தோட்டத்துச் சாலையில் உள்ள வீட்டில் குடியிருந்தவாறு விவசாயம் செய்து வருகின்றனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தோட்டத்து வீட்டில் தம்பதியா் தூங்கிக்கொண்டு இருந்தனா். அப்போது, வீட்டுக்குள் புகுந்த முகமூடி அணிந்த 3 நபா்கள் தம்பதியா் இருவரின் கைகளையும் கயிற்றால் கட்டிப்போட்டு, கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 18 பவுன் தங்க நகை, ரூ.38 ஆயிரம் ரொக்கத்தைப் பறித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனா்.
பின்னா், தம்பதியா் இருவரும் கயிற்றை அவிழ்த்துவிட்டு, கள்ளிமந்தையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொள்ளையா்களைத் தேடி வருகின்றனா்.

