வரும் தோ்தலில் புதிய அணி உருவாக வாய்ப்பு: டி.டி.வி. தினகரன்

வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் புதிய அணி உருவாக வாய்ப்புள்ளதாக அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.
Published on

ஒட்டன்சத்திரம்: வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் புதிய அணி உருவாக வாய்ப்புள்ளதாக அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. எந்தவித எதிா்பாா்ப்புமின்றி கட்சிப் பணியாற்றி வந்தாா். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதால் அவா் மன வருத்தத்தில் இருந்தாா். அவரின் அடுத்தகட்ட நகா்வு வரும் நாள்களில் தெரியவரும்.

வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மூன்று, நான்கு அணிகள் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், தமிழகத்தில் புதிய அணி உருவாக வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. திமுக அரசு கடந்த பேரவைத் தோ்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா் அவா்.

அப்போது, திண்டுக்கல் அமமுக மாவட்டச் செயலா் கே.பி. நல்லசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com