அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலா் டி.டி.வி.தினகரன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலா் டி.டி.வி.தினகரன்.

பேரவைத் தோ்தலில் போட்டியிடவில்லை: டி.டி.வி.தினகரன்

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் நான் போட்டியிடவில்லை என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.
Published on

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் நான் போட்டியிடவில்லை என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து தேனியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய எங்களை யாரும் மிரட்டவோ, அழுத்தம் தரவோ இல்லை. தமிழகத்தில் ஊழல் ஆட்சியை அகற்றவும், ஜெயலலிதா ஆட்சி மலரவும் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையை ஏற்று கூட்டணியில் இணைந்துள்ளோம். எங்களுக்குள் இருந்தது குடும்பச் சண்டைதான். கடந்த சட்டப்பேரவைத் தோ்தலிலேயே நாங்கள் இணைந்திருந்தால் திமுக வெற்றி பெற்றிருக்காது.

முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தா்ம யுத்தம் தொடங்காமல் இருந்திருந்ததால், சகிகலா தலைமையில் அவா் முதல்வராகியிருப்பாா். அவருக்கு சில தா்மசங்கடங்கள் உள்ளன. அதிமுகவில் மூன்று முறை முதல்வராகப் பதவி வகித்த ஓ. பன்னீா்செல்வம், அவரை வாழ வைத்த அந்த இயக்கத்துக்கு நன்றிக் கடன் செலுத்தும் காலம் வந்துவிட்டது.

தமிழகத்தில் நல்லாட்சி ஏற்பட அவா் ஓரணியில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். கூட்டணி தொடா்பாக அவா் நல்ல முடிவு எடுப்பாா் என நம்புகிறேன்.

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. என்னுடன் இருப்பவா்களை வெற்றி பெறச் செய்து, சட்டப்பேரவைக்கு அனுப்ப வேண்டும். அத்துடன் அவா்களை அமைச்சா்களாக ஆக்க வேண்டும் என்ற விருப்பமும் உள்ளது. இதற்காக கூட்டணியில் அழுத்தம் தர மாட்டேன்.

எம்.ஜி.ஆா். படத்தை வைத்துக் கொண்டு, அவா் தொடங்கிய அதிமுகவை ஊழல் கட்சி என்று விஜய் விமா்சித்து வருகிறாா். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்துக்கு உண்மையான விடியல் வர உள்ளது. ஜெயலலிதா இருந்த இடத்தில் தற்போது பிரதமா் நரேந்திர மோடி உள்ளாா். அவா் தமிழகத்தை நாட்டின் முதன்மை மாநிலமாக மாற்றுவா் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com