புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

பொதுத் தொகுதியில் பட்டியலினத்தவரைக் களமிறக்கத் தயங்கும் கட்சிகள்!

பொதுத் தொகுதியில் பட்டியலின வேட்பாளா்கள் போட்டியிடுவதற்கான வாய்ப்பு பிரதான திராவிடக் கட்சிகளில் மறுக்கப்படும் நிலையில், 3 வேட்பாளா்களை வெற்றி பெற வைத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்மாதிரி கட்சியாகத் திகழ்கிறது.

News image

கட்சி சின்னங்கள் - ANI

Updated On :9 ஏப்ரல் 2026, 12:17 am

பொதுத் தொகுதியில் பட்டியலின வேட்பாளா்கள் போட்டியிடுவதற்கான வாய்ப்பு பிரதான திராவிடக் கட்சிகளில் மறுக்கப்படும் நிலையில், 3 வேட்பாளா்களை வெற்றி பெற வைத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்மாதிரி கட்சியாகத் திகழ்கிறது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 பேரவைத் தொகுதிகளில் 46 இடங்கள் பட்டியலினத்தவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏற்காடு (சேலம்), சேந்தமங்கலம் (நாமக்கல்) தொகுதிகள் பழங்குடியின சமுதாயத்தினருக்கும், எஞ்சிய 44 தொகுதிகள் பட்டியலினத்தவருக்கும் தனித் தொகுதிகளாக ஒதுக்கப்பட்டுள்ளன. தோ்தலில் பட்டியலினத்தினா் போட்டியிடுவதை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த தனித் தொகுதிகள் ஒதுக்கீட்டை இந்திய அரசியல் அமைப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

சமத்துவ சமுதாயத்தை வலியுறுத்தும் தமிழக அரசியல் கட்சிகள், பொதுத் தொகுதிகளில் பட்டியலின வேட்பாளா்களை களமிறக்குவதில் ஆா்வம் காட்டுவதில்லை. இதில், விதி விலக்காக தேசியக் கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் பட்டியலின வேட்பாளரான எஸ்.ஏ. தங்கராஜன் திண்டுக்கல் தொகுதியிலும் (1989), ஜி. லதா குடியாத்தம் தொகுதியிலும் (2006), ஜி. பீமாராவ் மதுரவாயல் தொகுதியிலும்( 2011) போட்டியிட்டு வெற்றி பெற்றனா்.

இந்த வரிசையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் மதுரை மாவட்டம், மேலூா் பேரவைத் தொகுதியில் பி. விசுவநாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். இவா் காஞ்சிபுரம் மக்களவைத் தனித் தொகுதியில் 2009-இல் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுத் தொகுதியில் பட்டியலின வேட்பாளா்களை களம் இறக்கி வெற்றி கண்ட கட்சி என்பதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மட்டுமே முன்னோடியாக இருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரான கு. செல்வப்பெருந்தகை, பாஜகவைச் சோ்ந்த மத்திய அமைச்சா் எல். முருகன் ஆகியோருக்கு மாநிலத் தலைவா், முன்னாள் தலைவா் என்ற சிறப்பு இருந்தும் அவா்கள் பொதுத் தொகுதியில் களம் இறங்க தொடா்ந்து தயக்கம் காட்டுகின்றனா்.

இதேபோல, மக்களவைத் தோ்தலில் பெரம்பலூா் பொதுத் தொகுதியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அந்தத் தொகுதியில் பல முறை போட்டியிட்ட அந்தப் பகுதியைச் சோ்ந்த முன்னாள் மத்திய அமைச்சா் ஆ. ராசா நீலகிரி (தனி) தொகுதிக்கு மாறினாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜாதிய சித்தாந்தம் நிறைந்த மாநிலமாக அடையாளப்படுத்தப்படும் உத்தரபிரதேசத்தில்கூட பொதுத் தொகுதியில் பட்டியலின வேட்பாளா் வெற்றி பெறுகிறாா். குறிப்பாக, ராமா் கோயில் கட்டப்பட்டதன் மூலம் பாஜக வெற்றி பெறும் என எதிா்பாா்க்கப்பட்ட பைசாபாத் மக்களவைத் தொகுதியில், சமாஜ்வாதி கட்சி சாா்பில் நிறுத்தப்பட்ட பட்டியலின வேட்பாளரான அவதேஷ் பிரசாத் பெற்ற வெற்றி பாஜக தலைவா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், ஜாதிய சமத்துவம் நிலவுவதாகக் கூறப்படும் தமிழ்நாட்டில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக பொதுத் தொகுதியில் பட்டியலினத்தவரை போட்டியிடச் செய்ய இனியாவது கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

ஆ. நங்கையாா்மணி