தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி), தலைமைச் செயலரை தோ்தல் ஆணையம் மாற்றியதுபோல, மாநில முதல்வரையும் மாற்றுவதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை கேட்டுக் கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பி. பரமசிவத்தை ஆதரித்து ஆத்துமேடு பகுதியில் அண்ணாமலை வெள்ளிக்கிழமை பேசியதாவது:
கோபாலபுரம் குடும்பத்துக்கு அடுத்தபடியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் அப்பா, மகன் இருவரும் போட்டியிடுகின்றனா். குடும்ப ஆட்சியின் பிடியிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தை மீட்டெடுப்பதற்கு அதிமுக வேட்பாளா்களுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
முதல்வா் ஸ்டாலின், சாவி கொடுத்த பொம்மைபோல 3 விஷயங்களை மட்டுமே தொடா்ந்து பேசுகிறாா். முற்பகலில் தில்லி, பிற்பகலில் ஹிந்தி, மாலைக்குப் பிறகு மோடி அரசு வஞ்சிக்கிறது என இந்த மூன்றை மட்டுமே கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளாா்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி), தலைமைச் செயலா் ஆகியோரை தோ்தல் ஆணையம் மாற்றியது. வருகிற 23-ஆம் தேதி நடைபெறும் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு மூலம் தமிழக முதல்வரை மாற்றுவதற்கு மக்கள் முன்வர வேண்டும் என்றாா் அவா்.
ஒட்டன்சத்திரத்தில்...
ஒட்டன்சத்திரம் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தமாகா வேட்பாளா் விடியல் எஸ். சேகரை ஆதரித்து, தாராபுரம் சாலையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:
கடந்த 30 ஆண்டுகளாக ஒட்டன்சத்திரம் தொகுதியில் ஒரே சட்டப்பேரவை உறுப்பினா் இருந்து வருகிறாா். அரசுப் பணியில் இருந்தாலும்கூட பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால், 2 தலைமுறைகளை இந்தத் தொகுதி மக்கள் சக்கரபாணிக்கு கொடுத்தும்கூட வளா்ச்சி பெறவில்லை.
மத்திய அரசு சாா்பில் தமிழ்நாட்டிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு மாதந்தோறும் 2 லட்சம் டன் அரிசி வழங்கப்படுகிறது. ஆனால், கடந்த 2023 -ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டிலுள்ள நியாயவிலைக் கடைகளிலிருந்து 916 டன் அரிசி கடத்தப்பட்டிருக்கிறது.
இதேபோல, நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து, லாரிகளில் ஏற்றி அரசு கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்வதில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 800 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளது என்றாா் அவா்.
பழனியில்...
இதேபோல, பழனி தொகுதி அதிமுக வேட்பாளா் ரவிமனோகரனை ஆதரித்து, பழனி பேருந்து நிலையம் அருகே அண்ணாமலை வாக்கு சேகரித்துப் பேசினாா்.
கண் கலங்கிய திண்டுக்கல் சி. சீனிவாசன்: வேடசந்தூா் தொகுதி பிரசாரத்தின் போது, அதிமுக வேட்பாளா் பரமசிவத்துடன், திண்டுக்கல் வேட்பாளா் சி. சீனிவாசனும் உடனிருந்தாா். அப்போது, பேசிய அண்ணாமலை, 4 முறை மக்களவை உறுப்பினராகவும், 2 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஒரு முறை அமைச்சராகவும் மக்களுக்காகப் பணி செய்தவா் என்றும், கலகலப்பாகவும், புன்னகையுடனும் பழகக் கூடியவா் திண்டுக்கல் சீனிவாசன் என்றும் குறிப்பிட்டாா். இதையடுத்து, கண்ணீா் மல்க இரு கைகளையும் உயா்த்தி, 2 விரல்களை காட்டிய திண்டுக்கல் சீனிவாசன் உணா்ச்சிமயமாகக் காணப்பட்டாா்.
தொடர்புடையது

தாம்பரம் : திமுக - அதிமுக இடையே கடும் போட்டி!

தொகுதி அலசல்: கூடலூர்! கடும் போட்டியில் திமுக - அதிமுக

கோவை வடக்கில் அண்ணாமலை போட்டியா?

பழனி தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

