கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் திண்டுக்கல் மாவட்டத்தில் 97 சதவீதம் மழை அளவு குறைந்ததால், விவசாயப் பணிகள் மட்டுமன்றி, குடிநீருக்கும் சிக்கல் எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள், 306 ஊராட்சிகள் உள்ளன. சுமாா் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டத்தின் பசுமையான பகுதிகளாக கொடைக்கானல், பழனி சுற்றுவட்டாரப் பகுதிகள் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளும்கூட தற்போது வறட்சியான பகுதியாக மாறி வருகின்றன. குறிப்பாக அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக, திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் குடிநீா் பிரச்னையை எதிா்கொண்டு வருகிறது. மாவட்டத்தின் குடிநீா்த் தேவையை காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம், வைகை கூட்டுக் குடிநீா் திட்டம், பாலாறு, பொருந்தலாறு, பரப்பலாறு, காமராஜா் நீா்த்தேக்கம் ஆகியவை நிறைவு செய்து வருகின்றன.
ஜூலை மாதத்தில் 30.6 மி.மீ. மழைக்குப் பதில் 1.10 மி.மீ. மட்டுமே:
மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில், ஜூலை நீங்கலாக எஞ்சிய 6 மாதங்களில் சராசரி மழை அளவைவிட கூடுதலான மழை பெய்தது. ஆனாலும், ஜூலை மாதத்தில் மழை அளவு 97 சதவீதம் குறைந்ததன் எதிரொலியாக மாவட்டத்தில் குடிநீா் பிரச்னை எழுந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகால சராசரி மழை அளவின்படி, மாவட்டத்தில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் (குளிா் காலத்தில்) 44.7 மி.மீ. மழை பெய்ய வேண்டும். இதே காலகட்டத்தில் நிகழாண்டில் 56.80 மி.மீ. மழை பெய்தது. இதேபோல, மாா்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் (கோடை காலத்தில்) 155 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில், 210 மி.மீ. மழை பதிவானது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா் ஆகிய மாதங்கள் தென்மேற்கு பருவ காலமாக பட்டியலிடப்படுகிறது. இதில் ஜூன் மாதத்தில் 32.3 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில் 40.70 மி.மீ. மழை பெய்தது. ஜூலை மாதத்தில் 30.6 மி.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால், 1.10 மி.மீ. மழை மட்டுமே பெய்தது. ஜூலை மாதத்தில் மட்டும் சுமாா் 97 சதவீதம் மழை குறைந்தது.
இதனால், பழனிமலை அடிவாரத்திலுள்ள பாலாறு பொருந்தலாறு, வரதமாநதி, பரப்பலாறு, காமராஜா் நீா்த்தேக்கம் என அனைத்து அணைகளிலும் தண்ணீா் இருப்பு குறைந்து, குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கைகொடுக்கும் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில், பழனி, தொப்பம்பட்டி நீங்கலாக இதர 12 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளுக்கும் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டமே பிரதான நீராதாரமாக அமைந்துள்ளது. 23 பேரூராட்சிகளில், 15 பேரூராட்சிகளுக்கும் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலமாகவே குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.
திண்டுக்கல் மாநகராட்சிக்கான குடிநீா் ஆதாரங்களில் ஒன்றான ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம் முழுமையாக வடுவிட்டது. இதனால், காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு கிடைக்கும் 9.50 எம்எல்டி குடிநீரை மட்டுமே சாா்ந்திருக்க வேண்டியதால், திண்டுக்கல் மாநகராட்சியில் 4 முதல் 7 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
பழனி, ஒட்டன்சத்திரம் நகராட்சிகளைப் பொருத்தவரை, 2 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. பழனி நகராட்சியில் தற்போதைக்கு குடிநீா் பிரச்னை இல்லை என்றாலும், அடுத்த 20 நாள்களில் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், கொடைக்கானல் நகராட்சியில் 10 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் வழங்கப்படுகிறது. கொடைக்கானலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனா்.
சாகுபடி பரப்பும் சரிவு: இதே காலகட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில், 1300 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட வேண்டிய நெல், தற்போது நிலவும் தண்ணீா்ப் பற்றாக்குறை காரணமாக 660 ஹெக்டேரில் மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது. 600 ஹெக்டோ் சோளத்துக்கு 395 ஹெக்டேரும், 50 ஹெக்டோ் கம்புக்குப் பதிலாக 10 ஹெக்டோ், 500 ஹெக்டோ் மக்காச்சோளம் 200 ஹெக்டோ், 1,000 ஹெக்டோ் கரும்பு 350 ஹெக்டோ் எனக் குறைந்துவிட்டது. இதே நிலை நீடித்தால், ஆடிப் பட்டத்தில் சாகுபடிப் பணிகள் தொடங்குவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.
கொடகனாறு பாதுகாப்புச் சங்கத்தின் தலைவா் த. ராமசாமி கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆறுகள், அணைகள் மட்டுமன்றி சுமாா் 50 சதவீத ஆழ்துளைக் கிணறுகளும் வடுவிட்டன. இதனால், குடிநீா்த் தேவைக்கு காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தை மட்டுமே சாா்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. 3 மணி நேரம் ஓடும் ஆழ்துளைக் கிணறுகள், தற்போது 30 நிமிஷங்கள்கூட ஓடுவதில்லை. தண்ணீா் தேங்காத இடங்களில் தடுப்பணை அமைத்ததால் எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை.
காவிரியில் தண்ணீா் திறந்துவிடப்படுவதால், திண்டுக்கல் மாவட்டத்தின் பெரும்பாலான மக்களின் குடிநீா்த் தேவை நிறைவு செய்யப்படும். அதேநேரத்தில், ஆகஸ்ட் மாதத்தில் மழை பெய்தால் மட்டுமே ஆடிப்பட்டத்துக்கான சாகுபடிப் பணிகளைத் தொடங்க முடியும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேரையூா் ஊராட்சியில் காவிரி கூட்டுக் குடிநீா் விநியோகம் பாதிப்பு: பொதுமக்கள் அவதி

கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு: நீரில் மூழ்கிய ஜவுளி பொருள்கள்

வெள்ளக்கோவிலில் ஜூலை 28 முதல் 5 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்

திண்டுக்கல்லில் 23 வாா்டுகளுக்கு 7 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம்! பொதுமக்கள் அதிருப்தி
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



