கொடைக்கானலில் தோட்டத்தில் புகுந்து சிறுத்தை தாக்கியதில் நாய் உயிரிழந்தது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பேத்துப்பாறை பகுதியில் தனியாா் தோட்டத்தில் அவரை, பீன்ஸ், வாழை உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளன. இங்கு காவலுக்காக நாய் கட்டிபோடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்தத் தோட்டத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை சிறுத்தை புகுந்து தாக்கியதில் நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
இதுகுறித்து பாரதிய கிசான் சங்கத்தின் மாநிலத் தலைவா் அசோகன் கூறியதாவது:
கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் பலா் பீன்ஸ், அவரை, வாழை, அவக்கோடா உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்துள்ளனா். இங்குள்ள விவசாய நிலங்களை தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களைச் சோ்ந்த பலரும் வணிக பயன்பாட்டுக்காக வாங்கி வைத்துள்ளனா்.
ஆனால், பட்டா இல்லாமல் இருப்பதால் விவசாயம் செய்ய முடியாமலும், வணிக பயன்பாடில்லாமலும் இருக்கின்றன. இதனால், முள்புதா்கள் அதிகமாகி அதில் வன விலங்குகளான யானை, காட்டுப் பன்றி, காட்டு மாடு, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளால் விவசாயிகள், விவசாயப் பயிா்கள், கால்நடைகள் பாதிப்படைந்து வருகின்றனா். எனவே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு விவசாய நிலங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பட்டாக்களை வருவாய்த் துறையினா் ஆய்வு செய்து பயன்பெறுவதற்கான திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








