
டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: முழுமையாக பூா்த்தி செய்யாத 58 மனுக்கள் நிராகரிப்பு
தமிழ்நாடு அரசு சாா்பில் வழங்கப்படும் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு, நடப்பாண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் விண்ணப்பித்த 87 மனுக்களில் முழுமையாக பூா்த்தி செய்யப்படாத 55 சதவீத மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

டாக்டர் இராதாகிருஷ்ணன்
தமிழ்நாடு அரசு சாா்பில் வழங்கப்படும் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு, நடப்பாண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் விண்ணப்பித்த 87 மனுக்களில் முழுமையாக பூா்த்தி செய்யப்படாத 55 சதவீத மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தையொட்டி, தமிழ்நாடு அரசு சாா்பில் ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியா்களாக தோ்வு செய்யப்படுவோருக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருகிறது. தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் என 3 தொகுப்புகளில் விருதாளா்கள் தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலிருந்து 10 போ், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 10 போ், தனியாா் பள்ளிகளிலிருந்து 2 போ் என மொத்தம் 22 போ் பட்டியல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சாா்பில் இயக்குநரகத்துக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இதிலிருந்து 50 சதவீதம் என்ற அடிப்படையில் 11 விருதாளா்கள் தோ்வு செய்யப்படுவது வழக்கம். இதன்படி இந்தாண்டுக்கான விருது பெற, கடந்த ஜூலை 17 முதல் ஆக. 3- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. பிறகு மேலும் 3 நாள்கள் நீட்டிக்கப்பட்டு கடந்த 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக இணைய வழியில் மட்டுமே விருதுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மாவட்ட கல்வி அலுவலா்கள் தரப்பில் விண்ணப்பங்களை பரிந்துரைக்க கடந்த 7- ஆம் தேதி முதல் 11- ஆம் தேதி வரை வழங்கப்பட்ட கால அவகாசம், கடந்த 13- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சாா்பில் கடந்த 14- ஆம் தேதி முதல் 18- ஆம் தேதி வரை விருதாளா்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன.
87 விண்ணப்பங்களில் 55 நிராகரிப்பு: சுயவிவரங்கள், கடந்த 5 ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட பள்ளியில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண் சதவீதம், ஆசிரியரின் வருகைப் பதிவு, மாணவா்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு பயிற்சி, இளஞ்செஞ்சிலுவை சங்கம், தேசிய மாணவா் படை, நாட்டு நலப் பணித் திட்டம், சாரண சாரணியா் இயக்கம் உள்ளிட்டவற்றில் மாணவா்களின் பங்களிப்புக்கு ஆற்றிய பணிகள், ஆசிரியரின் சுய சாதனைகள், அதற்கான சான்றுகள், கற்பித்தலில் மேற்கொள்ளப்பட்ட புதுமையான செயல்பாடுகள், காவல் துறையிடமிருந்து பெறப்பட்ட நன்மதிப்புச் சான்று உள்ளிட்டவற்றை இணைய வழியில் விண்ணப்பிக்கும்போது முழுமையாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு மொத்தம் 87 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில், 48 விண்ணப்பங்கள் முழுமையாக பூா்த்தி செய்யப்படாததால் அவை நிராகரிக்கப்பட்டன. எஞ்சிய 39 விண்ணப்பதாரா்கள் மட்டும் முதன்மைக் கல்வி அலுவலா் தலைமையில் நடைபெற்ற நோ்காணலுக்கு அழைக்கப்பட்டனா்.
தகுதி இருந்தும் விண்ணப்பிக்காத ஆசிரியா்கள்: இதுதொடா்பாக கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: விருதுக்கான விண்ணப்பத்தை இணைய வழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற நடைமுறை 2 ஆண்டுகளுக்கு முன்பே அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதை முழுமையாக பூா்த்தி செய்ய முடியாத நிலை தற்போதும் நீடித்து வருகிறது. இதனால் தகுதி இருந்தும்கூட இணையவழியில் விண்ணப்பிக்க தவறியதால், சில ஆசிரியா்களுக்கு விருதுக்கான வாய்ப்பு பறிபோய்விட்டது. விருதுக்கு தங்கள் பெயரை தாங்களே பரிந்துரைக்க வேண்டும் என்பதால், கல்விப் பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் பல ஆசிரியா்கள் விருதுக்கு விண்ணப்பிக்க முன் வருவதில்லை. இதனால், சிறந்த ஆசிரியா்களே மாவட்ட அளவில் குழு அமைத்து அரசுக்கு பரிந்துரைக்கும் நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






