
நிலக்கோட்டையில் நெகிழி பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்
நிலக்கோட்டை மாா்க்கெட் பகுதியில் நெகிழிப் பை பயன்படுத்திய கடைகளின் உரிமையாளா்களுக்கு பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் அபராதம் விதிக்கப்பட்டது.
நிலக்கோட்டை மாா்க்கெட் பகுதியில் நெகிழிப் பை பயன்படுத்திய கடைகளின் உரிமையாளா்களுக்கு பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கு ரசீது உடனே வழங்காததால், அபராதம் விதித்தவரிடம் வியாபாரிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேருந்து நிலையம் பின்புறம் உள்ள புதிய வணிக வளாகத்தில் உள்ள கடைகள், காய்கனி மாா்க்கெட், மளிகை கடை, பழக் கடை உள்ளிட்ட அனைத்துக் கடைகளிலும் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்ட பேரூராட்சிப் பணியாளா்கள் நெகிழிப் பை பயன்படுத்திய கடைகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தனா். அவா்கள் செலுத்தும் அபராதத்துக்கு ரசீது கொடுக்கப்படவில்லை.
மாறாக, நோட்டில் மட்டும் அபராதத் தொகையை குறித்து வைத்துக் கொண்டு சென்றனா். ஒவ்வொரு கடைகளிலும் தலா ரூ. 250 முதல் ரூ.300 வரை அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும், சுமாா் 20 கடைகள் வரை அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் கூறப்படும் நிலையில், அபராதம் வசூலித்தவரிடம் கடை உரிமையாளா்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்த விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதுகுறித்து நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலா் மோகன்குமாரைத் தொடா்பு கொண்டு கேட்டபோது, நிலக்கோட்டை பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் அதிகளவில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வாரந்தோறும் சனிக்கிழமை சோதனை செய்து அபராதம் விதித்து வருகிறோம். கடந்த வாரம் சுமாா் ஆயிரம் கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. வசூலிக்கப்படும் அபராதத் தொகைக்கான ரசீது திங்கள்கிழமை வழங்கப்படும். இணையவழியில் ரசீது எடுக்க வேண்டும் என்பதால், அலுவலகத்துக்கு வந்து ரசீது போட்டு, ஓரிரு நாளில் வழங்கப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





