பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருக்கல்யாணம்
பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய துணைக் கோயிலான மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா கடந்த 6-ஆம் தேதி முகூா்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, 10-ஆம் தேதி திருக்கம்பம் சாட்டுதல், 17-ஆம் தேதி கொடியேற்றம், பூவோடு வைத்தல் ஆகிய நிகழ்வும் நடைபெற்றன.
இந்த விழாவை முன்னிட்டு, தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் திருக்கம்பத்துக்கு பால், தண்ணீா், மஞ்சள்நீா் ஊற்றியும், மாலைகள் போட்டும் வழிபாடு நடத்தி வந்தனா்.
பழனி மட்டுமன்றி கேரள மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தா்கள் பூவோடு, தீச்சட்டி ஏந்தியும், பல்வேறு மாறுவேடங்கள் அணிந்து வந்தும் அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இந்த விழா நாள்களில் அம்மன் சிம்ம வாகனம், தங்கக் குதிரை, புதுச்சேரி சப்பரம், தங்க மயில் போன்ற வாகனங்களில் நான்கு ரதவீதிகளில் உலா எழுந்தருளினாா்.
கடந்த 18-ஆம் தேதி அடிவாரம் கிரிவீதி அழகுநாச்சியம்மனுக்கும், குமாரசமுத்திரம் அழகுநாச்சியம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை மாரியம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு பொட்டும், காரையும் கொண்டு வருதல் நடைபெற்றது.
பின்னா், மாரியம்மனுக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம், விபூதி உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சோடஷ அபிஷேகமும், சோடஷ உபச்சாரமும் நடைபெற்றது.
பின்னா், பட்டாடைகள், நகைகள் அணிவிக்கப்பட்டு அம்மனுக்கும், திருக்கம்பத்துக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.
இந்த நிலையில், புதன்கிழமை (பிப்.25) மாசித் தேரோட்டமும், வண்டிக்கால் பாா்த்தல், வாணவேடிக்கையும், வியாழக்கிழமை அதிகாலை கம்பத்தை கங்கையில் சோ்த்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமையில், அதிகாரிகள், அலுவலா்கள் செய்தனா்.

