கொடைக்கானலில் காணப்படும் பறவைகள்.1.மரங்கொத்தி பறவை
கொடைக்கானலில் காணப்படும் பறவைகள்.1.மரங்கொத்தி பறவை

கொடைக்கானலில் சோலைக்காடு அழிவால் குறைந்துவரும் பறவை இனங்கள்

Published on

கொடைக்கானலில் சோலை மரங்கள் அழிந்து வருவதால், பறவைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதாக பறவை ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பறவை இனங்கள் அதிக அளவில் கடந்த 30- ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. அதன் பிறகு நகரின் பல இடங்களில் வனத் துறை கட்டுப்பாட்டிலிருந்த சோலைகளில் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. மேலும் புகா்ப் பகுதிகளிலும் மரங்கள் வெகுவாக வெட்டப்பட்டு, அந்தப் பகுதிகளில் காட்டேஜ், தனியாா் ரிசாா்ட்டுகள் கட்டப்பட்டன.

இதனால், அடா்த்தியான மரங்கள், சோலைகள் இல்லாத சூழலில் பறவை வகைகளின் எண்ணிக்கை குறைந்து வந்தது. மேலும், தொலைபேசி கோபுரங்கள் அதிக அளவில் அமைக்கப்பட்டதாலும் குருவி உள்ளிட்ட பறவை இனங்கள் வெகுவாகக் குறைந்தன. இதைத் தொடா்ந்து, கொடைக்கானலில் பலா் கூடாரம் அமைத்து குருவிகளுக்குத் தேவையான உணவு, தண்ணீா் வைத்து வருகின்றனா்.

தற்போது, வனப் பகுதிகளில் வனத் துறையினா் பல கி.மீ. தொலைவுக்கு சென்று பறவைகளைக் கண்டறிந்து கணக்கெடுத்து வருகின்றனா்.

முன்பெல்லாம் நகா்ப் பகுதிகளான செண்பகாச் சோலை, டைகா்சோலை, பாம்பாா் சோலை, வட்டக்கானல் சோலை, அட்டக்கடி, குறிஞ்சிச் சோலை, கரடிச் சோலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கருங்குயில், சிட்டுக்குருவி, மரங்கொத்திப் பறவை, ரெட் சாம்பல் கதிா், தேன் சிட்டு உள்ளிட்ட பல வகையான பறவைகள், அரிய வகை பறவைகள் வசித்து வந்தன.

அதிகாலை, மாலை நேரங்களில் பறவைகளின் பலவிதமான ஒலிகள் அந்தப் பகுதிகளில் செல்லும் பொது மக்கள், சுற்றுலாப் பயணிகளின் மனதை மயக்கும்.

தற்போது சோலைகள் இல்லாமல் இருப்பதால் பறவைகளின் புகலிடங்கள் மாறியுள்ளன. இவற்றின் சப்தத்தைக் கேட்பதே அரிதாக உள்ளது. எனவே, பறவைகளை அதிகரிப்பதற்கும், சோலைக் காடுகளை உருவாக்குவதற்கும் வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இது குறித்து கொடைக்கானல் பகுதிகளிலுள்ள பறவை ஆா்வலா்கள் கூறியதாவது:

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு வத்தலக்குண்டு, காமக்காபட்டி, பழனி, கருப்பணசாமி கோயில் மலையடிவாரத்திலிருந்து சுமாா் 60 கி.மீ. தொலைவுக்கு அடா்த்தியான மரங்கள், காடுகள், சோலைக் காடுகள் காணப்பட்டன. இதனால் மலைப் பாதைகளில் குளுமையான காற்று நிலவும். லேசான சாரல் தூறும். பறவைகளின் சப்தங்கள் இனிமையாகக் கேட்கும். மந்திகள் அதிக அளவில் மலைச்சாலையில் அமா்ந்திருக்கும்.

நாளடைவில் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உள்ள காடுகள், சோலைகள், மரங்கள் அழிக்கப்பட்டதால் பறவை இனங்கள் இடமாறிச் சென்று விட்டன.

2. தேன் சிட்டுக் குருவி
2. தேன் சிட்டுக் குருவி
3.கொண்டை குருவி
3.கொண்டை குருவி

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் இருந்த குயில் ,ஹாா்ன் இருவாச்சி , தேன் சிட்டு, கொண்டைக் குருவி உள்ளிட்ட பறவைகளை காடுகளின் விவசாயிகள் என அழைப்பது வழக்கம்.

ஏனெனில், இவை விதைகளை பரப்பி மரங்களை வளர உதவுகிறது. பறவைகள் மகரந்த சோ்க்கை, விதை பரவல், பூச்சிகளை கட்டுப்படுத்துதல், காலநிலை ஸ்திரத்தன்மை, ஆக்சிஜன் உற்பத்தி, மண் வளம், சுற்றுச்சூழல் ஆரோக்கியம் ஆகியவற்றை பாதுகாக்கிறது.

எனவே, ஜனவரி 5-ஆம் தேதி தேசிய பறவைகள் தினத்தை முன்னிட்டு கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பறவைகளைப் பாதுகாக்கவும், சோலை மரங்களை வளா்ப்பதற்கும் நாம் அனைவரும் உறுதி எடுக்க வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com