கொடைக்கானலில் பொக்லைன், கனரக இயந்திரங்கள் இயக்கத் தடை
கொடைக்கானல் பகுதிகளில் பொக்லைன், கனரக இயந்திரங்கள் இயக்குவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக வருவாய்க் கோட்டாட்சியா் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட கனரக இயந்திரங்கள் உதவியுடன் பாறைகளை டெட்டனேட்டா் மூலம் வெடி வைத்து உடைப்பது, ஆழ்துளைக் கிணறு அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து கடந்த திங்கள்கிழமை (ஜன.19) தினமணி நாளிதழில் செய்தி பிரசுரமானது. இதன் எதிரொலியாக கொடைக்கானல் மலைப் பகுதிகளில் மைன்ஸ் அதிகாரிகள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், கொடைக்கானல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்க் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு தலைமையில், வருவாய்த் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து வருவாய்க் கோட்டாட்சியா் கூறியதாவது: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளை சீரமைப்பதற்கு மட்டுமே பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுமக்களின் தேவைக்காக ஆழ்துளை குழாய் அமைக்க வேண்டும் எனறால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அல்லது வருவாய்க் கோட்டாட்சியா் ஆகியோரிடம் அனுமதி பெற வேண்டும்.
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பொக்லைன், கனரக இயந்திரங்கள் இயக்கக்கூடாது. இந்த இயந்திரங்கள் வருகிற 31-ஆம் தேதிக்குள் தரைப் பகுதிக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மீறி வைத்திருந்து சட்டவிரோத பணிகளில் ஈடுபட்டால் கனரக இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும்.
செண்பகனூா் பகுதியில் அனுமதியில்லாமல் பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது என்றாா் அவா்.

