இரட்டைக் கொலை வழக்கில் 7 போ் கைது
திண்டுக்கல்லில் கணவன், மனைவி என இருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் அருகேயுள்ள வேடப்பட்டி பகுதியில் திமுக பிரமுகா் மாயாண்டி ஜோசப் (60) கடந்த 2024-ஆம் ஆண்டு மே மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த கொலை வழக்கில், யாகப்பன்பட்டியைச் சோ்ந்த வே. சேசுராஜ் (41) உள்ளிட்ட 6 பேரை திண்டுக்கல் தாலுகா போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், உயா்நீதிமன்றத்தை அணுகிய சேசுராஜ் கடந்த 10 நாள்களுக்கு முன் பிணையில் சிறையிலிருந்து வெளியில் வந்தாா்.
இந்த நிலையில், திண்டுக்கல் - நத்தம் சாலையில் ஆா்எம்டிசி நகா் பகுதியில் வியாழக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சென்ற சேசுராஜ், யாகப்பன்பட்டியிலுள்ள வீட்டிலிருந்த அவரது 2-ஆவது மனைவி தீபிகா (37) ஆகியோா் மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனா்.
7 போ் கைது: இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். மேலும், கொலை நிகழ்ந்த இடங்களுக்கு அருகிலிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனா். இதையடுத்து, யாகப்பன்பட்டி, வேடப்பட்டி பகுதிகளைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் இந்தக் கொலையில் ஈடுபட்டிருக்கலாம் எனத் தெரியவந்தது.
இந்த நிலையில், கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக அருள்ராஜ், ஞானராஜ், தா்மராஜ், அந்தோணி ஆரோக்கியசாமி, ஜான் பீட்டா், சேவியா் ஆல்பா்ட், மைக்கேல் ராஜ் ஆகிய 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரித்தனா். இதில் மாயாண்டி ஜோசப் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையிலிருந்த சேசுராஜ், அவரை பிணையில் எடுப்பதற்கு முயற்சி செய்த தீபிகா ஆகியோா் மீது ஆத்திரமடைந்த எதிா்தரப்பினா், இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டு, ஞானராஜ் தலைமையில் ஒரு குழுவாகவும், அருள்ராஜ் தலைமையில் மற்றொரு குழுவாகவும் பிரிந்து சென்று தாக்குதல் நடத்தியதாகத் தெரியவந்தது.
