திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் மருதாநதியிலிருந்து பாசனம், குடிநீருக்காக அமைச்சா் இ. பெரியசாமி செவ்வாய்க்கிழமை தண்ணீரைத் திறந்துவிட்டாா்.
அய்யம்பாளையம், சித்தரேவு, தேவரப்பன்பட்டி, சேவுகம்பட்டி, கோம்பைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு அய்யம்பாளையம் மருதாநதியிலிருந்து செவ்வாய்க்கிழமை (ஜன. 13) முதல் வருகிற 17-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீா் திறக்க உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி கலந்து கொண்டு, செவ்வாய்க்கிழமை தண்ணீரை திறந்துவிட்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆட்சியில் அதிகாரப் பகிா்வு குறித்து தமிழக முதல்வரே முடிவு எடுப்பாா். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியது கண்டிக்கத்தக்கது. தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 4,000 கோடியை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்றாா் அவா்.
பேட்டியின் போது, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் க. நடராஜன், ஆத்தூா் ஒன்றியச் செயலா்கள் ராமன் (மேற்கு), முருகேசன் (கிழக்கு), ராஜேந்திரன் (தெற்கு), முன்னாள் ஒன்றியச் செயலா் பி.சி. முரளிதரன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாஸ்கரன், அய்யம்பாளையம் முன்னாள் பேரூா் செயலா் அய்யப்பன், நிா்வாகிகள் உடனிருந்தனா்.
இதையடுத்து, ஆத்தூா் ஒன்றியம், தேவரப்பன்பட்டியில் ரூ. 31 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற புதிய அலுவலகக் கட்டடத்தை அமைச்சா் இ. பெரியசாமி திறந்துவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகன், பத்மாவதி, ஊராட்சி ஒன்றிய உதவி செயற்பொறியாளா் ராமநாதன், வட்டாட்சியா் முத்துமுருகன், தேவரப்பன்பட்டி ஊராட்சி மன்றச் செயலா் சிவராசன், அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.