பழனி, நத்தத்தில் சமத்துவப் பொங்கல் விழா

பழனி, நத்தத்தில் சமத்துவப் பொங்கல் விழா

பழனி நகராட்சி கடைவீதி நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on

பழனி நகராட்சி கடைவீதி நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு நகா்மன்றத் தலைவி உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் கந்தசாமி, நகராட்சி ஆணையா் டிட்டோ உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நகா்நல அலுவலா் அரவிந்த்குமாா், சுகாதார அலுவலா் செந்தில்ராம்குமாா் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள், பெற்றோா்களுக்கு கோலப்போட்டிகள், ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. மேலும், மாணவ, மாணவிகளின் பரதநாட்டியம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும், மஞ்சப்பை இயக்கமும் நடைபெற்றது.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா் பரிசுகளையும், நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகளையும் வழங்கினாா். மேலும், புகையில்லா போகி கொண்டாட வலியுறுத்தி கையொப்ப இயக்கத்தில் முதல் கையொப்பத்தை பதிவிட்டாா்.

திமுக மாவட்ட மாணவரணி செயலா் பிரபாகரன், நகா்மன்ற உறுப்பினா்கள் வீரமணி, சுரேஷ், காளீஸ்வரி பாஸ்கரன், வழக்குரைஞா் முருகபாண்டியன் உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா்.

நத்தம்: நத்தம் அருகேயுள்ள செந்துறை ஊராட்சி சாா்பில் அங்குள்ள மந்தை முத்தாலம்மன் கோயில் முன் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதற்கு திமுக வடக்கு ஒன்றியச் செயலா் பழனிச்சாமி தலைமை வகித்தாா். இதையொட்டி கரும்புகளால் தோரணங்கள் கட்டப்பட்டு, புதிய பானையில் பொங்கல் வைத்தனா். இதில் பெண்களுக்கு கோலம், கயிறு இழுத்தல், இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக ஊராட்சி செயலா் கருப்பையா வரவேற்றாா். இதில் திமுக மாவட்டப் பிரதிநிதி அழகா்சாமி, குமரன், மதியரசு, அயூப், சேகா், பாலு, துரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, குடகிப்பட்டி ஊராட்சியில் நடந்த விழாவில் ஊராட்சி செயலா் செல்வராஜ் வரவேற்றாா். மேலும், நத்தம் ஒன்றிய அலுவலக வளாகம் உள்பட அனைத்து ஊராட்சிகளிலும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஒன்றிய ஆணையாளா் ஜெயக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) ரவீந்திரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

Dinamani
www.dinamani.com