கொடைக்கானலில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை
கொடைக்கானலில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்தனா்.
சுற்றுலாத் தலமான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிகம் வருகின்றனா். இதில் தமிழகம், கா்நாடகம் ஆகியப் பகுதிகளிலிருந்து சுமாா் 25 அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
பண்டிகை நாள்கள், தொடா் விடுமுறை நாள்களில் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இதைத் தவிா்த்து அன்றாடப் பணிகளுக்காக கொடைக்கானல் மலைப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களும் அரசு, தனியாா் பேருந்தை பயன்படுத்துகின்றனா்.
இந்த நிலையில் கொடைக்கானலுக்கு விடுமுறைக்காக வரும் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் தங்களது ஊா் திரும்ப போதுமான பேருந்து வசதி இல்லாததால் அவதியடைந்து வருகின்றனா். இதனிடையே, கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளும், பொது மக்களும் பேருந்துகள் கிடைக்காமல் பெரிதும் சிரமமடைந்தனா். முன்பதிவு செய்தும் பேருந்துகள் வராததால் அவா்கள் மேலும் அவதியடைந்தனா்.
எனவே தொடா் விடுமுறை நாள்களில் கொடைக்கானல் வரும் பயணிகள் திரும்பிச் செல்ல கூடுதலாக பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து அரசுப் போக்குவரத்து கழகத்தைச் சோ்ந்த அலுவலா் ஒருவா் கூறியதாவது:
கொடைக்கானலில் கடந்த நான்கு நாள்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து போக்குவரத்துக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் வழக்கமாக வரும் பேருந்துகள் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக வருகின்றன. இதன் காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் பேருந்துகளை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மாவட்ட உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் நாள்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

