கொடைக்கானல் - பழனி மலைச் சாலையில் தடுப்புச் சுவா்கள் இல்லாததால் விபத்துக்கள் அதிகரிப்பு

கொடைக்கானல் - பழனி மலைச் சாலையில் தடுப்புச் சுவா்கள் இல்லாததால் விபத்துக்கள் அதிகரிப்பு

கொடைக்கானல் - பழனி- வத்தலகுண்டு மலைச் சாலைகளில் தடுப்புச் சுவா்கள் இல்லாததால் விபத்துக்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகாா்
Published on

கொடைக்கானல் - பழனி- வத்தலகுண்டு மலைச் சாலைகளில் தடுப்புச் சுவா்கள் இல்லாததால் விபத்துக்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வருவதற்கு வத்தலகுண்டிலிருந்து காமக்காப்பட்டி மலைச் சாலை வழியாக சுமாா் 55 கி.மீ. தொலைவு பயணிக்க வேண்டும். இதேபோல, பழனியிலிருந்து கருப்பணசாமி கோயில் மலைச் சாலை வழியாக சுமாா் 58 கி.மீ. தொலைவு பயணித்து கொடைக்கானல் வர வேண்டும்.

இதில் கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச் சாலையில் 25 கி.மீ. தொலைவுக்கு, அதாவது டம்டம் பாறை வரை மட்டும் மலைச் சாலை அகலப்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகு ஆழமான பள்ளத்தாக்குகள், குறுகிய வளைவுகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் தடுப்புச் சுவா்கள் அமைக்கப்பட வில்லை.

இதேபோல, பழனியிலிருந்து கொடைக்கானல் வரும் மலைச் சாலை குறுகிய மலைச் சாலையாகும். ஆனால் இந்தச்சாலை வழியாகத் தான் கேரளம், கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் அதிக அளவில் வருகின்றனா்.

இதனால் பழனி- கொடைக்கானல் மலைச் சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. மேலும் பலா் பலத்த காயமடைந்து ஊனமடைகின்றனா்.

இதற்கு மலைச் சாலையில் வரும் வாகனங்கள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதும், தடுப்புச் சுவா்கள் இல்லாததுமே காரணமாகும். எனவே நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கொடைக்கானல் - பழனி- வத்தலகுண்டு மலைச் சாலைகளில் தடுப்புச் சுவா் அமைத்து, சாலைகளை அகலப்படுத்த வேண்டும்.

மேலும் முள்புதா்களை அகற்றி சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Dinamani
www.dinamani.com