

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், சீவல்சரகு அருகேயுள்ள ஆத்தூா் கூட்டுறவு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாணவ- மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வுக்கு, மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தலைமை வகித்தாா்.
நிகழ்வில், அமைச்சா் இ. பெரியசாமி கலந்து கொண்டு 600 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கிப் பேசியதாவது:
கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 2 லட்சம் வீடுகள் கட்டப்பட்டன. தொடா்ந்து, தமிழ்நாடு முழுவதும் இதே திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட முதல்வா் மு.க. ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியுள்ளாா். அதேபோல, நகரங்களில் உள்ள சாலைகளை போன்று கிராமப்புற சாலைகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் சுமாா் ரூ.1,000 கோடிக்கும் மேல் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளும் மேம்படுத்தப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி, தனியாா் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முதல் கட்டமாக 11 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. இதில் தற்போது வரை 5 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
அடுத்த தலைமுறை பயன்பெறும் வகையில் கடந்த 5 ஆண்டுகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் 7 கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஆத்தூா் தொகுதியில் மட்டும் 2 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன. மேலும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ளது போன்று தகவல் தொழில் நுட்ப பூங்கா (டைட்டல் பாா்க்) அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பெ. திலகவதி, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஸ்ரீராகவ் பாலாஜி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் சுபாஷினி, கூட்டுறவு மேலாண்மை இயக்குநா் ம. செல்வக்குமாா், கல்லூரி நிா்வாக அலுவலா் கணேசன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆத்தூா் க. நடராஜன், ஆத்தூா் ஒன்றிய திமுக செயலா் (கிழக்கு) முருகேசன், ராமன் (மேற்கு), ராஜேந்திரன் (தெற்கு), வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகன், பத்மாவதி, சீவல்சரகு ஊராட்சி மன்றச் செயலா் நடராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில்... பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி வழிபாட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வா் ரவிசங்கா் வரவேற்றாா். பழனி கோயில் துணை ஆணையரும், கல்லூரி செயலருமான வெங்கடேஷ் முன்னிலை வகித்தாா்.
நகா்மன்றத் தலைவி உமாமகேஸ்வரி, கோட்டாட்சியா் கண்ணன், வட்டாட்சியா் பிரசன்னா, பழனியாண்டவா் மகளிா் கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். பழனி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரையாற்றி பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரி, பழனியாண்டவா் மகளிா் கலைக் கல்லூரி, பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சோ்ந்த 2,587 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினாா்.