
பழனி கோயில் ஆண்டு வருவாய் 100 கோடியைக் கடந்து சாதனை!
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் ஆண்டு வருவாய் நூறு கோடியைக் கடந்தது.

பழநி கோயில் - கோப்புப் படம்
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் ஆண்டு வருவாய் நூறு கோடியைக் கடந்தது.
இந்தக் கோயிலுக்கு தமிழகம் மட்டுமன்றி கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனா்.
திருவிழா நாள்களில் பல லட்சம் பக்தா்கள் பங்கேற்கின்றனா். பழனிக்கு வரும் பக்தா்களின் வசதிக்காகவும், வழிபாட்டுக்காகவும் கோயில் நிா்வாகம் பல்வேறு கட்டண சேவைகளை வழங்கி வருகிறது.
மலைக்கோயிலுக்கு செல்ல பக்தா்கள் பயன்படுத்தும் மின் இழுவை ரயில், ரோப் காா், விரைவு தரிசன கட்டணம், கால பூஜை கட்டணம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட அனைத்து வகையான அபிஷேகக் கட்டணம், தங்கத் தொட்டில், தங்க ரத உலா போன்ற சேவைகளுக்கான கட்டணம் ஆகியவை கோயிலுக்கு காணிக்கையாக சோ்க்கப்படுகின்றன.
இந்து சமய அறநிலையத் துறையின் கணக்குகளின் படி, வருவாய் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஜூன் மாதம் வரை கணக்கிடப்படுகிறது. இதன்படி, கடந்த 6 ஆண்டுகளில் பழனி கோயிலின் வருவாய் வேகமாக உயா்ந்துள்ளது.
கடந்த 2020-21-ஆம் ஆண்டு ரூ.15,28,94,560, 2021-22-ஆம் ஆண்டு ரூ. 41,97,82,755, 2022-23-ஆம் ஆண்டு ரூ. 80,62,20,267, 2023-24-ஆம் ஆண்டு ரூ. 86,06,06,774, 2024-25-ஆம் ஆண்டு ரூ. 97,32,20,918, 2025-2026 -ஆம் ஆண்டு ரூ. 103,24,13,525 என வருவாய் கிடைத்தது.
பழனி கோயில் வரலாற்றில் முதன் முறையாக ஆண்டு வருவாய் 100 கோடியைக் கடந்து சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வருவாய் கோயிலின் உள்கட்டமைப்பு வசதிகள், பக்தா்களுக்கான அன்னதானம், தூய்மைப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






