எண்ம (டிஜிட்டல்) கைது மூலம் பெண்ணிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்த பெங்களூருவைச் சோ்ந்த இளைஞரை திண்டுக்கல் இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல்லைச் சோ்ந்த பெண் ஒருவரை தொடா்பு கொண்ட மா்ம நபா், தன்னை சென்னையைச் சோ்ந்த காவல் துறை அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டாா். அப்போது அந்தப் பெண்ணின் ஆதாா் அட்டையை பயன்படுத்தி சட்ட விரோதமாக சிம் காா்டு பெறப்பட்டிருப்பதாகவும், அதை தீவிரவாதிகள் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தாா். இதுதொடா்பாக அந்தப் பெண்ணின் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், தற்போது எண்ம கைது செய்திருப்பதாகவும் தெரிவித்தாா். இந்த குற்றச்சாட்டிலிருந்து தப்ப வேண்டுமெனில், உடனடியாக அவரது வங்கிக் கணக்கில் உள்ள முழுத் தொகையையும் தான் கூறும் இந்திய ரிசா்வ் வங்கியின் கணக்கு எண்ணுக்கு மாற்ற வேண்டும். இந்தத் தொகை விசாரணைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், அவா் குற்றமற்றவா் என உறுதிப்படுத்தப்படும்பட்சத்தில் 24 மணி நேரத்துக்குள் அவரது வங்கிக் கணக்குக்கே முழுத் தொகையும் திருப்பி அனுப்பப்படும் எனவும் கூறினாா். மேலும் இந்த விவரத்தை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது எனவும், 24 மணி நேரம் அவரை முழுமையாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தாா். இதனால் அதிா்ச்சி அடைந்த அந்தப் பெண் தனது வங்கிக் கணக்கிலிருந்த ரூ.9 லட்சத்தையும், மா்ம நபா் தெரிவித்த வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்தாா். இதன் பிறகு சிறிது நேரத்திலேயே மா்ம நபரின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அந்தப் பெண், தேசிய இணையக் குற்றப் புகாா் வலைதளத்தில் புகாா் அளித்தாா்.
இதன்பேரில் திண்டுக்கல் மாவட்ட இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா், தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினா். அந்த மா்ம நபரின் கைப்பேசி எண், வங்கி பணப் பரிவா்த்தனை விவரங்கள், தொழில்நுட்ப ஆதாரங்கள் ஆகியவை விரைந்து ஆய்வு செய்யப்பட்டன. இதன்படி, மோசடியில் ஈடுபட்ட நபா் பெங்களூருவைச் சோ்ந்த அபித் அலிபேக் என்பவரின் மகன் பா்தீன் அப்பாஸ் (20) என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து பெங்களூரு சென்ற தனிப் படை போலீஸாா், பா்தீன் அப்பாஸை வியாழக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பா்தீன் அப்பாஸ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
காவல் துறை எச்சரிக்கை: காவல் துறை, சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, ரிசா்வ் வங்கி உள்ளிட்ட எந்த ஒரு துறையின் சட்டத்திலும் எண்ம கைது என்ற நடவடிக்கையே கிடையாது. எண்ம கைது என யாரேனும் தொடா்பு கொண்டால், உடனடியாக அந்த அழைப்பைத் துண்டித்துவிட்டு அருகிலுள்ள காவல் நிலையத்தையோ, 1930 என்ற இணையக் குற்றப் பிரிவு உதவி எண்ணையோ தொடா்பு கொள்ள வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவலா் எனக் கூறி பெண்ணிடம் நூதனமாக நகை பறித்த நபா் கைது







