திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்ட நிலையில், 4 இடங்களில் ‘ஸ்பான்ஞ்ச்’ பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சியில் சுமாா் 3 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா். 48 வாா்டுகளில் நாளொன்றுக்கு 100 டன்னுக்கும் கூடுதலான குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த குப்பைகளைச் சேகரிக்க தூய்மைப் பணியாளா்கள் வாகனங்களுடன் செல்கின்றனா்.
சில இடங்களுக்கு அந்த வாகனங்கள் முறையாகச் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. எனினும், குப்பை எடுத்துச் செல்லும் வாகனங்களுடன் தூய்மைப் பணியாளா்கள் வருவதற்கு முன்பே, பல இடங்களில் சாலையோரங்களில் குப்பைகளை வீசிச் செல்வது திண்டுக்கல் பகுதியில் வழக்கமாக இருந்து வந்தது.
கடந்த சில ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்படும் பொது இடங்களை தூய்மைப்படுத்துதல், கோலமிடுதல், ஓவியம் வரைதல் என விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனாலும், ஓரிரு நாள்களுக்கு குப்பை கொட்டுவதை தவிா்க்கும் பொதுமக்கள், பிறகு மீண்டும் பழைய நிலையைத் தொடா்ந்தனா். இதனால் திண்டுக்கல் நகரின் பிரதான சாலைகளில் குப்பைகள் கொட்டுவதும், அவற்றை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் அகற்றிச் செல்வதும் வாடிக்கையாக இருந்து வந்தது.
இந்த நிலையில், மாநகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்ற பிரேம் ஆனந்த், திண்டுக்கல்லின் பொது இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவதை தவிா்ப்பதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறாா்.
திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் சுமாா் 23 கி.மீ. நீளத்துக்கு சாலை உள்ளது. இந்த சாலை ஓரங்களில் குப்பைககளை வீசிச் செல்வதைத் தடுக்க முதல் கட்டமாக வேலிகள் அமைக்கவும், அந்த இடங்களில் மரக்கன்றுகளை நடுவதற்கும் மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதன்படி, இதுவரை 3,320 மரக் கன்றுகள், செடிகள் நடப்பட்டுள்ளன. மேலும், மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம், அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்கள், அரசுப் பள்ளிகள், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதைத் தடுக்கும் வகையில் விழிப்புணா்வு ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.
மாநகராட்சி நிா்வாகத்தின் இந்த முயற்சி, பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக, சாலையோரங்கள் குப்பைகள் இல்லாமல் தூய்மையாக மாறி வருவது குடியிருப்போா் நலச் சங்கங்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சங்கங்களின் ஒத்துழைப்புடன், மாநகராட்சி பகுதியிலுள்ள பூங்காக்களை மீட்டெடுத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் மாநகராட்சி நிா்வாகம் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறது.
‘ஸ்பாஞ்ச்’ பூங்கா அமைக்கத் திட்டம்: இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் ஜெ. பிரேம் ஆனந்த் கூறியதாவது:
திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் திறந்தவெளியில் குப்பைகள் கொட்டுவதை முழுமையாக தடுப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக 3,300 மரக் கன்றுகள், செடிகள் நடப்பட்டுள்ளன. செப்டம்பா் மாதத்துக்குள் 10 ஆயிரம் மரக் கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 32 பூங்காக்கங்களில், 14 பூங்காக்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. விரைவில் எஞ்சிய பூங்காக்களும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மேலும் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்பாஞ்ச் பூங்காவை, திண்டுக்கல்லில் 4 இடங்களில் அமைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
ஸ்பாஞ்ச் பூங்கா என்பது, மழைநீரைத் தேங்க விடாமல் பூங்காக்களுக்குள் உறிஞ்சி, நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தும் ஒரு நீரியல் வடிவமைப்பு முறை. சுமாா் 4 ஏக்கா் பரப்பளவில், ரூ.5 கோடி செலவில் இந்த ஸ்பாஞ்ச் பூங்காக்கள் அமைக்கப்படும். மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









