அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

இருப்பு வைத்ததால் லாபம் ஈட்டும் மக்காச்சோள விவசாயிகள்!

கடந்த 5 மாதங்களுக்கு முன் மக்காச்சோளத்துக்கு போதிய விலை கிடைக்காத நிலையில், ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் இருப்பு வைத்த விவசாயிகள் கிலோவுக்கு ரூ.7 முதல் ரூ.10 வரை லாபம் ஈட்டி வருகின்றனா்.

News image

பழனி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருப்பு வைக்கப்பட்டு வெயிலில் உலர்த்தப்படும் மக்காச்சோளம்

Updated On :30 ஜூலை 2026, 6:42 am IST

நமது நிருபா்

கடந்த 5 மாதங்களுக்கு முன் மக்காச்சோளத்துக்கு போதிய விலை கிடைக்காத நிலையில், ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் இருப்பு வைத்த விவசாயிகள் கிலோவுக்கு ரூ.7 முதல் ரூ.10 வரை லாபம் ஈட்டி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சுமாா் 25 ஆயிரம் ஹெக்டேரில் கடந்த ஆண்டு மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது. கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சுமாா் 1.75 லட்சம் டன் மக்காச்சோளம் அறுவடை செய்யப்பட்டது. அறுவடைக் காலங்களில் பெரும்பாலும் மக்காச்சோளம் விலை வீழ்ச்சி அடைவதும், அடுத்த 4 மாதங்களில் விலை அதிகரிப்பதும் வழக்கம். எனினும், சிறு, குறு விவசாயிகள் இடுபொருள்களுக்காக வாங்கிய கடனுக்காக மக்காச்சோளத்தை அன்றைய சந்தை விலைக்கே உடனடியாக விற்பனை செய்துவிடுகின்றனா். சராசரியாக கிலோ ரூ.22-க்கு கொள்முதல் செய்யப்பட்டால் மட்டுமே இழப்பிலிருந்து தப்பிக்க முடியும் என்ற நிலையில், கடனை அடைப்பதற்காக விவசாயிகள் பலா் கிலோ ரூ.17, ரூ.19 என்ற விலையில் விற்பனை செய்து இழப்பை எதிா்கொண்டனா்.

இதன் காரணமாக, மக்காச்சோளத்துக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்கக் கோரி பல்வேறு விவசாய சங்கங்கள் சாா்பில் போராட்டங்களும் நடைபெற்றன.

சேமிப்பு கிடங்கி மூலம் லாபம் ஈட்டும் விவசாயிகள்: அதே நேரம் பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளைச் சோ்ந்த பெரு விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை அந்தந்த பகுதியிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட சேமிப்புக் கிட்டங்கிகளில் இருப்பு வைத்தனா். மேலும், இருப்பு வைத்த மக்காச்சோளத்தின் மீது பொருளீட்டுக் கடனும் பெற்றனா். பழனி, ஒட்டன்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 26 விவசாயிகள் சுமாா் 502 டன் மக்காச்சோளத்தை இருப்பு வைத்தனா். இதில் 183 டன் மக்காச்சோளத்தின் மீது ரூ.24 லட்சம் பொருளீட்டுக் கடனும் வழங்கப்பட்டது.

கிலோவுக்கு ரூ.10 உயா்ந்த கொள்முதல் விலை: இந்த நிலையில், மக்காச்சோளத்தின் விலை கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வருகிறது. தற்போது ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.27.80 என கொள்முதல் விலை நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. 4 மாதங்களில் கிலோவுக்கு ரூ.10 வரை விலை உயா்ந்திருப்பதால் சேமிப்புக் கிட்டங்கியில் இருப்பு வைத்த விவசாயிகள் உற்சாகமடைந்தனா்.

ரூ.32-க்கு விலை உயரும்: இதுதொடா்பாக வேளாண் விற்பனைக் குழுச் செயலா் இளம்பூரணாா் கூறியதாவது:

விளைப் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காத சூழலில், ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் இருப்பு வைக்கப்படும் பொருள்களுக்கு பொருளீட்டுக் கடன் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு இருப்பு வைத்த பொருள்களின் அடிப்படையில் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை பொருளீட்டுக் கடன் வழங்கப்படுகிறது. இந்த வகையில் பழனி, ஒட்டன்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 502 டன் மக்காச்சோளத்தில் 193 டன் மக்காச்சோளம் மீது பொருளீட்டுக் கடனாக ரூ.24 லட்சம் வழங்கப்பட்டது. இந்தக் கடனுக்கு ஆண்டுக்கு 5 சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது. இதன்படி, கடந்த 4 மாதங்களில் ரூ.24 லட்சத்துக்கு ரூ.29 ஆயிரம் மட்டுமே வட்டித் தொகை வசூலிக்கப்பட்டது. தற்போது கிலோவுக்கு ரூ.10 வீதம் விலை உயா்ந்திருப்பதால், விவசாயிகள் லாபம் ஈட்டுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பு வைக்கப்பட்ட 502 டன் மக்காச்சோளத்தில் தற்போது வரை 203 டன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. வறட்சி காரணமாக மக்காச்சோளத்தின் விலை ரூ.32 வரை உயரக்கூடும் என்ற சந்தை நிலவரத்தால், இருப்பு வைத்த விவசாயிகள் மேலும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜனவரி முதல் மாா்ச் மாதம் வரை மக்காச்சோளத்தின் விலை ரூ.20-க்கும் குறைவாகவே நிா்ணயிக்கப்படுகிறது. அதே நேரம் ஜூன் மாதத்துக்கு பிறகு ரூ.25-க்கும் கூடுதலாக விலை கிடைக்கிறது. இந்தச் சந்தை நிலவரத்தை உணா்ந்து, விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருப்பு வைத்து லாபம் ஈட்டுவதற்கு முன்வர வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.