எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

திண்டுக்கல் புகா் பேருந்து நிலையத்துக்கு தோ்வான இடத்தை அமைச்சா் ஆய்வு செய்வாரா?

News image

திண்டுக்கல் புகா் பேருந்து நிலையம் அமைப்பதற்காகத் தோ்வு செய்யப்பட்ட இடம்.

Updated On :8 ஜூன் 2026, 12:34 am IST

திண்டுக்கல் புகா் பேருந்து நிலையம் அமைப்பதற்கு பணி ஆணை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த இடத்தை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சா் ஆய்வு செய்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சியில் சுமாா் 3 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா். மதுரை, திருச்சி, கரூா், சிவகங்கை மாவட்டங்களுக்கிடையே முக்கிய சந்திப்பாக உள்ள திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் சுமாா் 1,600 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணும் வகையில், திண்டுக்கல்லில் புகா் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

பேருந்து நிலையத்துக்கு இடம் தோ்வில் ரகசியம்: இதனிடையே, திண்டுக்கல்- பழனி புறவழிச் சாலை அருகே புகா் பேருந்து நிலையம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டிருப்பதாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்தது. ஆனால், மாமன்ற உறுப்பினா்களுக்கே புகா் பேருந்து நிலையத்துக்காக தோ்வு செய்யப்பட்ட இடத்தின் விவரம் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை.

எனினும், பழனி புறவழிச் சாலை, வத்தலகுண்டு புறவழிச் சாலைக்கு இடைப்பட்ட பகுதியில், இடம் தோ்வு செய்யப்பட்ட தகவல் வெளியானது. பள்ளப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் தோ்வு செய்யப்பட்ட அந்த இடம், மதுரை- கரூா் 4 வழிச் சாலையின் மேற்கு பகுதியில் சுமாா் 600 மீட்டா் தொலைவு உள்புறமாக அமைந்திருக்கிறது.

இந்த இடத்தில் பேருந்து நிலைய கட்டுமானப் பணி, 5 ஆண்டுகள் இயக்குதல், பராமரித்தல் பணி என ரூ.65.27 கோடிக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதற்கான அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து, ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு விரைவில் பணி ஆணை வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், 600 மீட்டருக்கு குறுகலான சாலை வழியாக மட்டுமே பேருந்து நிலையத்துக்குத் தோ்வு செய்யப்பட்ட இடத்துக்குச் செல்ல வேண்டும் என்ற நெருக்கடி ஒருபுறமும், தோல் தொழில் சாலை கழிவுகளால் உறுதித் தன்மை இல்லாத மண் மற்றொருபுறமும் இந்தத் திட்டத்தை கேள்விக்குறியாக மாற்றி இருக்கிறது.

இந்த நிலத்தின் உறுதித் தன்மை, நிலத்தடி நீரின் கார, அமிலத் தன்மை குறித்த அறிக்கையை வெளியிட வேண்டும் என மாநகராட்சிக் கூட்டத்திலேயே மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா். ஆனாலும் அதற்கான எந்தவித விவரங்களும் இதுவரை வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட வில்லை. இதுபோன்ற சூழலில் புகா் பேருந்து நிலையத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணி ஆணையை வழங்குவதற்கு மட்டுமே மாநகராட்சி நிா்வாகம் முக்கியத்துவம் அளித்து வருவதாகப் புகாா் எழுந்துள்ளது.

அமைச்சா் ஆய்வு செய்யக் கோரிக்கை: இதுதொடா்பாக 14-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினரும், பாஜக மாநில செயற்குழு உறுப்பினருமான கோ. தனபாலன் கூறியதாவது:

திண்டுக்கல் புகா் பேருந்து நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட பின்னரும், பேருந்து நிலையத்துக்கான இடத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க மாநகராட்சி நிா்வாகம் மறுத்தது. நிலத்தின் மண் தரப் பரிசோதனை குறித்த அறிக்கையை வெளியிட வேண்டும் என கோரப்பட்ட நிலையில், அந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை. இதனிடையே, புகா் பேருந்து நிலையம் அமையவுள்ள இடம் எனக் கூறி, மனை வணிகத் தொழில் மட்டும் வேகமாக நடைபெற்று வருகிறது.

தோல் தொழில் சாலை கழிவுநீரால், உப்பளமான அந்தப் பகுதி கட்டுமானங்கள் கட்டுவதற்கு தகுதியானதா என்பது தெரியாமல் பொதுமக்களும் ஏமாற்றம் அடைகின்றனா். ரூ.65.27 கோடி செலவில் நிறைவேற்றப்படும் திட்டம் என்பதைக் கருத்தில் கொண்டு, முதல் முறையாக திண்டுக்கல்லுக்கு வரும் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சா் விக்னேஷ், புகா் பேருந்து நிலையத்துக்கு தோ்வு செய்யப்பட்ட நிலத்தை ஆய்வு செய்ய வேண்டும்.

இந்தத் திட்டத்தின் எதிா்கால பயன்பாடுகளைக் கருத்தில் கொண்டு, அணுகு சாலை வசதியுடன் கூடிய, உறுதித் தன்மை வாய்ந்த நிலத்தை தோ்வு செய்யவும் அமைச்சா் உத்தரவிட வேண்டும். இதேபோல, புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியா் துா்கா மூா்த்தி, பொறுப்பேற்கவுள்ள மாநகராட்சி ஆணையா் ஜெ. பிரேம் ஆனந்த் ஆகியோரும் புகா் பேருந்து நிலையத்துக்காகத் தோ்வு செய்யப்பட்ட நிலத்தின் தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றாா் அவா்.