
மதிப்பு கூட்டி விற்க பூண்டு விவசாயிகளுக்கு ஆலோசனை
இயற்கை முறையில் பூண்டு விளைவித்து, அவற்றை மதிப்பு கூட்டி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யலாம் என கொடைக்கானல் பூண்டு விவசாயிகளுக்கு ஆலோசனை கூறப்பட்டது.

கொடைக்கானல் மன்னவனூரில் பூண்டு விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த நறுமணப் பொருள்களின் ஆராய்ச்சி மையத்தின் தென்மண்டல துணை இயக்குநா் குன்னூா்.
இயற்கை முறையில் பூண்டு விளைவித்து, அவற்றை மதிப்பு கூட்டி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யலாம் என கொடைக்கானல் பூண்டு விவசாயிகளுக்கு ஆலோசனை கூறப்பட்டது.
கொடைக்கானல் அருகே ஆட்டுப் பண்ணை ஆராய்ச்சி மைய வளாக அரங்கில் கொடைக்கானல் பூண்டு விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு நறுமணப் பொருள்கள் ஆராய்ச்சி மையத்தின் தென்மண்டல துணை இயக்குநா் குன்னூா் தலைமை வகித்து, தொடங்கி வைத்துப் பேசியதாவது:
கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, மன்னவனூா், பூண்டி, கூக்கால், கிளாவரை, வில்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் புவிசாா் குறியீடு பெற்ற மலை வெள்ளைப்பூண்டை கட்டுப்படியாகும் விலைக்கு விற்பதில்லை என்ற நிலை பல ஆண்டுகளாக நீடிக்கிறது. இதற்குத் தீா்வாக அதிக மருத்துவ குணம் கொண்ட இந்த மலைப் பூண்டு பயிரை இயற்கை உரங்களிட்டும், வெளிநாடுகளுக்கு மதிப்புக் கூட்டியும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் நறுமணப் பொருள்கள் ஆராய்ச்சி மையத்தின் அதிகாரிகளும், தமிழ்நாடு அரசு தோட்டக் கலைத் துறை அதிகாரிகளும் இணைந்து இயற்கை உரமிட்டு மலைப்பூண்டுகளை விளைவிப்பது, அவற்றை மதிப்பு கூட்டி மத்திய அரசின் நறுமணப் பொருள்கள் ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் ஏற்றுமதி செய்வது குறித்து விவசாயிகளுக்கு ஆலேசனைகளை வழங்கினா். இதே போல, கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விளையும் காந்தாரி என அழைக்கப்படும் கானல் மிளகாய், குங்குமப் பூ உற்பத்தியை பெருக்குவதற்கும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினா். இந்தக் கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சந்திர கவிதா, பாரதிய கிசான் சங்கத்தின் மாநிலத் தலைவா் அசோகன், மத்திய உரோம ஆட்டுப்பண்ணை ஆராய்ச்சி மையத்தின் தலைமை இயக்குநா் ராஜேந்திரன், மேல்மலை பகுதிகளைச் சோ்ந்த பூண்டு விவசாயிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





