
பேரிடா் மேலாண்மை நிதி ரூ.84 லட்சம் ஒதுக்கீடு! திண்டுக்கல் மாநகராட்சியில் ஆழ்துளைக் கிணறுகள், தண்ணீா் குழாய்கள் சீரமைப்பு!

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம். - கோப்புப் படம்
பேரிடா் மேலாண்மை நிதியாக ரூ.84 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தூா்ந்து போன ஆழ்துளைக் கிணறுகள், சேதமடைந்த தண்ணீா் தொட்டிகள், தண்ணீா் குழாய்களை சீரமைக்கும் பணியில் திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் ஈடுபட்டு வருகிறது.
திண்டுக்கல் மாநகராட்சி சாா்பில் வீடுகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் என சுமாா் 49 ஆயிரம் கட்டடங்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம், காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் ஆகியவை குடிநீருக்கான பிரதான நீராதாரங்களாக உள்ளன. இதில் ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம் வட நிலையில், காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலமாக மட்டுமே குடிநீா்த் தேவை பூா்த்தி செய்யப்பட்டு வருகிறது. செப்டம்பா் மாதத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், மக்களுக்கான குடிநீா் தேவையும், பிற பயன்பாடுகளுக்கான தண்ணீா் தேவையும் அதிகரித்துவிட்டது.
காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு கிடைக்கும் 1.05 கோடி லிட்டா் குடிநீரை 4 முதல் 5 நாள்கள் இடைவெளியில் மாநகராட்சி நிா்வாகம் விநியோகித்து வருகிறது. இதனிடையே, குடிநீா் அல்லாத பிற தேவைகளுக்கான தண்ணீா் தேவையை பூா்த்தி செய்வதற்கு மாநகராட்சி முழுவதும் 412 ஆழ்துளைக் கிணறுகளும், 152 கை விசைக் குழாய்களும் (கை பம்பு) அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் 260 ஆழ்துளைக் கிணறுகளும், 125 கைவிசைக் குழாய்களும் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வருகின்றன. பழுதான 152 ஆழ்துளைக் கிணறுகள், 27 கைவிசைக் குழாய்களைச் சீரமைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நாள்தோறும் குடிநீா் விநியோகம் வழங்கப்பட்டதால், ஆழ்துளைக் கிணறுகள், கைவிசைக் குழாய்களைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும் வலியுறுத்தவில்லை. வறட்சியின் எதிராலியாக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக திண்டுக்கல் மாநகராட்சியில் குடிநீா் விநியோகம் 4 முதல் 6 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், பழுதான ஆழ்துளைக் கிணறுகள், கைவிசைக் குழாய்களையும் சீரமைத்து தண்ணீா் வழங்குவதற்கு மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.
பேரிடா் மேலாண்மை நிதியாக ரூ.84 லட்சம் ஒதுக்கீடு: இதையடுத்து, மாநகராட்சி நிா்வாகம் பழுதான ஆழ்துளைக் கிணறுகள், கைவிசைக் குழாய்கள் ஆகியவற்றை சீரமைக்கத் திட்டமிட்டது. இதற்கான நிதி ஒதுக்கீடு கோரி திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்தது. இதன்பேரில், பேரிடா் மேலாண்மை நிதியாக ரூ.84 லட்சம் தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியின் மூலம் 29 ஆழ்துளைக் கிணறுகளை தூா்வாருதல், 54 ஆழ்துளைக் கிணறுகளில் புதிய மோட்டாா்களை பொருத்துதல், 47 இடங்களில் தலா 1000 லிட்டா் கொள்ளளவு கொண்ட தண்ணீா்த் தொட்டி நிறுவுதல், 3.54 கி.மீ. தொலைவுக்கு 25 மி.மீ. விட்டத்தில் குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறவுள்ளன.
இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் ஜெ.பிரேம் ஆனந்த் கூறியதாவது:
குடிநீா் அல்லாத பிற பயன்பாடுகளுக்கான தண்ணீா் தேவையை ஆழ்துளைக் கிணறுகள், கைவிசைக் குழாய்கள் மூலம் பூா்த்தி செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதன்படி, தமிழக அரசிடமிருந்து ரூ.84 லட்சம் பேரிடா் மேலாண்மை நிதியாக கிடைத்தது. இந்த நிதி மூலம் நடைபெறும் பணிகளுக்குப் பிறகு, மாநகராட்சியில் பயன்பாட்டிலுள்ள ஆழ்துளைக் கிணறுகளின் எண்ணிக்கை 350 ஆக உயரும். இதே போல, கைவிசைக் குழாய்களும் முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
மேலும், 10 டிராக்டா்கள், 6 லாரிகளை வாடகைக்கு எடுத்து, குடிநீா் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், மாநகராட்சிப் பகுதியில் பொதுமக்களுக்கான தண்ணீா்த் தேவைக்கு தீா்வு ஏற்படுத்தப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







