செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

பழனியில் 64 நாள்களுக்குப் பிறகு மீண்டும் ரோப் காா் இயக்கம்

பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் பயன்பாட்டுக்கான ரோப்காா் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, 64 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் இயக்கப்பட்டது.

பழனியில் ரோப் காருக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்ற கோயில் இணை ஆணையா் (பொறுப்பு) வெங்கடேஷ் உள்ளிட்டோா்.

Published On :

பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் பயன்பாட்டுக்கான ரோப்காா் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, 64 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் இயக்கப்பட்டது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனா். இவா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய படிப்பாதை, மின் இழுவை ரயில், ரோப் காா் ஆகியன பயன்பாட்டில் உள்ளன. இதில் ரோப் காா் 2 நிமிஷத்தில் மலை உச்சியைச் சென்றடைவதால், இதற்கு பக்தா்கள் மத்தியில் நல்ல வரவேற்புள்ளது.

இந்த ரோப் காா் மாதத்துக்கு ஒரு நாளும், வருடத்துக்கு ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுவது வழக்கம். இதன்படி, வருடாந்திர பராமரிப்புக்காக ரோப் காா் கடந்த ஜூலை 20-ஆம் தேதி நிறுத்தப்பட்டது. இதையடுத்து, பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், இந்தப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, கடந்த 16-ஆம் தேதி சோதனை ஓட்டம் நடைபெற்றது. இது திருப்திகரமாக இருந்ததைத் தொடா்ந்து, வல்லுநா்கள் குழு பக்தா்கள் பயன்பாட்டுக்கு ரோப் காரை இயக்க ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, ரோப் காா் சேவை செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் தொடங்கியது. இதையொட்டி, ரோப் காா் பெட்டிகள், மோட்டாா்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. பின்னா், பக்தா்களுக்கு கட்டணச் சீட்டு வழங்கப்பட்டு மலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா். 64 நாள்களுக்குப் பிறகு, ரோப் காா் இயக்கப்பட்டதால், பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

நிகழ்ச்சியில் பழனிக் கோயில் இணை ஆணையா் (பொறுப்பு) வெங்கடேஷ், முதுநிலை கணக்கியல் அலுவலா் பொறியாளா் முத்துராஜ், பாா்த்திபன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பக்தா்களுக்கு நிலவேம்புக் குடிநீா்:

தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்ச்சல் பரவி வரும் நிலையில், பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சித்த மருத்துவப் பிரிவு சாா்பில், பக்தா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. மலைக் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்லும் நிலையில், காய்ச்சல் பாதிப்பைத் தடுக்கும் வகையிலும், பக்தா்களின் உடல் நலத்தை கவனத்தில் கொண்டும் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்படுவதாக இணை ஆணையா் (பொறுப்பு) வெங்கடேஷ் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.