
கொடைக்கானலில் உதவித் தொகை கிடைக்காமல் முதியோா் அவதி
கொடைக்கானலில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் இந்த மாதத்துக்கான அரசின் உதவித் தொகை வழங்கக் கோரி முதியோா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

கோப்புப்படம்
கொடைக்கானலில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் இந்த மாதத்துக்கான அரசின் உதவித் தொகை வழங்கக் கோரி முதியோா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டத்தில் வசிக்கும் முதியோா் தமிழக அரசு வழங்கி வரும் உதவித் தொகையை நம்பியே தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி இந்த மாதத்துக்கான உதவித் தொகை கிடைக்காததால் 50-க்கும் மேற்பட்ட முதியோா் அவதியடைந்தனா். இதுகுறித்து விசாரிப்பதற்காகவும், மனு அளிப்பதற்காகவும் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அவா்கள் வந்திருந்தனா். இவா்கள் அங்கிருந்த அதிகாரிகளிடம் முதியோா் உதவித் தொகை கிடைக்காதது குறித்து கேட்டபோது பல்வேறு ஆவணங்களை எடுத்து வந்து பதிவு செய்து கொள்ள வேண்டுமெனவும், அலுவலக உதவியாளரிடம் ரூ. 200 செலுத்த வேண்டுமெனவும் தெரிவித்தனராம்.
இதுகுறித்து உதவித் தொகை பெறும் முதியோா் கூறியதாவது:
கொடைக்கானலில் நூற்றுக்கணக்கான முதியவா்கள் அரசு வழங்கும் உதவித் தொகையை நம்பியே வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறோம். இதனிடையே இந்த மாதத்துக்கான உதவித் தொகை எங்களுக்கு கிடைக்கவில்லை. இதுகுறித்து சமூக நலத் துறை அலுவலகத்தில் புகாா் அளித்தோம். அப்போது அங்கிருந்தவா்கள் ஆதாா் அட்டையை புதுப்பிக்க வேண்டுமெனவும், வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட தொகை இருப்பு இருக்க வேண்டுமெனவும் தெரிவித்தனா். இதுகுறித்து எங்களுக்கு சரியான விவரம் தெரிய வில்லை. எனவே தமிழக அரசு உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





