
முனைவா் பட்ட மாணவருக்கு உரிய உதவித்தொகை அளிப்பு: சமூக நீதித் துறை விளக்கம்
மலேசிய நாட்டில் முனைவா் பட்ட ஆய்வு மேற்கொண்டுவரும் பாரதிதாசன் என்ற மாணவருக்கு அம்பேத்கா் அயலகக் கல்வி உதவித் தொகைத் திட்டத்தின்கீழ் உரிய உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக சமூக நீதித் துறை விளக்கம்

மாணவர் பாரதிதாசன் - video grab
மலேசிய நாட்டில் முனைவா் பட்ட ஆய்வு மேற்கொண்டுவரும் பாரதிதாசன் என்ற மாணவருக்கு அம்பேத்கா் அயலகக் கல்வி உதவித் தொகைத் திட்டத்தின்கீழ் உரிய உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக சமூக நீதித் துறை விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து அந்தத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மாணவா் பாரதிதாசன், மலேசிய நாட்டில் ஆராய்ச்சி படிப்பதற்காக அயலகக் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் 2025-2026-ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ரூ. 36 லட்சம் வரை கல்வி உதவித் தொகை வழங்க ஒப்புதல் அளித்து, ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநரால் பரிந்துரை கடிதம் கடந்த 2025-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில், முதலாம் கல்வி ஆண்டான 2025-2026-இல் மாணவரின் படிப்புக்கு ரூ.36 லட்சம் கல்வி உதவித் தொகை முறையாக வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி கல்விக் கட்டணம் ரூ.5,01,638, விசா மற்றும் விமானக் கட்டணம் ரூ.3,58,222, வாழ்க்கை செலவினங்கள் ரூ.8,46,893, ஆராய்ச்சி செலவினம் ரூ.18,93,247 என மொத்தம் ரூ.36,00,000 வழங்கப்பட்டுள்ளது.
இதில் கல்விக்கட்டணம் ரூ.5,01,638-ஐ பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குக்கும், மீதமுள்ள தொகையான ரூ.30,98,362-ஐ மாணவரின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தொகையில் விசா, விமானக் கட்டணம் தவிர மாணவரின் ஆராய்ச்சி மற்றும் வாழ்க்கை செலவினங்களுக்காகப் பெற்ற தொகை ரூ.27,40,140-க்கான செலவுப் பட்டியலைச் சமா்ப்பிக்குமாறு மாணவரிடம் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், மாணவா் உரிய ஆவணங்களை சரியாக சமா்ப்பிக்கவில்லை. அதேசமயம் 2-ஆம் ஆண்டுக்கான (2026-2027) கல்வி உதவித் தொகையை முழுமையாக வழங்கக் கோரிக்கை வந்த நிலையில் மாணவரின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, அவா் பல்கலைக்கழகத்துக்குச் செலுத்தவேண்டிய முழு கல்விக் கட்டணம் ரூ.5.57 லட்சம் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குக்கும், மாணவருக்கு வாழ்க்கை செலவினமாக ரூ.6.65 லட்சம் மாணவரின் வங்கிக் கணக்குக்கும் என மொத்தம் ரூ.12 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, மாணவா் 2-ஆம் ஆண்டு ஆராய்ச்சி செலவினங்களுக்காக ரூ.19.50 லட்சம் விடுவிக்குமாறு கோரியுள்ளாா். அதில் மாணவா் அளித்துள்ள செலவினபட்டியல்கள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகப் பதிவாளரால் பரிந்துரை செய்யப்படவில்லை.
இந்த நிலையில் மாணவா் முதலாமாண்டு படிப்புக்கான ஆராய்ச்சி மற்றும் வாழ்க்கை செலவினங்களுக்காகச் சமா்பித்த ஆவணங்களில், ரூ.8,17,962-க்கான செலவினங்கள் ஏற்புடையதாக இல்லை. இந்த ஆவணங்கள் தொடா்பாக கடந்த ஆக். 20-ஆம் தேதி மாணவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் இதுவரையில் சரியான விளக்கம் அளிக்கபடவில்லை.
மேலும், மாணவா் பயிலும் பல்கலைக்கழகப் பதிவாளருக்கு மாணவா் பாரதிதாசன் 2-ஆம் ஆண்டு கல்விக்கான ஆராய்ச்சி செலவின கோரிக்கை ரூ.19.50 லட்சம் தொடா்பாக, அவா் தெரிவித்துள்ள ஆராய்ச்சி பொருள்கள் மற்றும் அதற்கான செலவினங்கள் அவருக்கு ஆராய்ச்சிக்குத்தான் தேவைப்படுகிறது என்பதை பல்கலைக்கழகம் பரிந்துரைத்து அனுப்புமாறு தெரிவித்து வியாழக்கிழமை (செப். 17) ஆதிதிராவிடா் நலத் துறையிலிருந்து மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டு, அதன் நகல் மாணவா் பாரதிதாசனுக்கும் அனுப்பப்பட்டது.
பல்கலைக்கழகத்திலிருந்து பதில் கிடைக்கப்பெற்றவுடன் கல்வி உதவித் தொகை விடுவிக்கப்படும் என்ற விவரமும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவா் பாரதிதாசன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட காணொலியில் குறிப்பிட்டுள்ள கருத்துகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகவும், அவப்பெயா் ஏற்படுத்தும் நோக்கத்துடன் உள்ளது எனத் தெரிவிக்கப்ப்டடுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







