மது பார்கள் (டாஸ்மாக்) முறைகேடு உள்ளிட்ட மது தொடர்பான புகார்கள் அளிக்க 10581 இலவச தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என மதுவிலக்கு கூடுதல் இயக்குநர் சி.கே.காந்திராஜன் தெரிவித்துள்ளார்.
மதுவிலக்கு தொடர்பாக தென்மாவட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு ஆய்வுக் கூட்டம் மதுரை மாவட்ட ஊரகக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:
தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்குச் சோதனைச் சாவடிகள் தீவிர கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டுள்ளன. எரிசாராயம், போலி மற்றும் அண்டை மாநில மதுபானங்கள் தமிழகத்துக்குள் வராமலிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு தொடர்பான வழக்கில் கைது, குண்டர் சட்டத்தில் நடவடிக்கையை தீவிரப்படுத்தவேண்டும். கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கள் இறக்குதல், போலி மதுபானம் தயாரித்தல், எரிசாராயம் கடத்திப் பதுக்குதல், டாஸ்மாக் கடையில் அதிக விலைக்கு மதுப்பாட்டில் விற்பது, மது அருந்தும் பார்களில் முறைகேடுகள் ஆகியவை குறித்து 10581 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். செல்பேசி மூலமும் இதில் தொடர்புகொள்ளலாம். தகவல் தருவோருக்கு பரிசளிக்கப்படும். கடந்த ஆண்டில் 93,757 மதுவிலக்கு வழக்குகள் பதிந்து 94,644 பேர் கைதாகியுள்ளனர். நடப்பாண்டில் (2013) 74,128 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 75,068 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
கூட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் எம்.மாலிக்பெரோஸ்கான், வாணிபக்கழக மேலாண்மை இயக்குநர் டி.செüண்டையா, மதுரை மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறை தலைவர் என்.சேஷாயி, தென்மண்டல ஐ.ஜி.அபய்குமார்சிங், மதுரை போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூர், மதுரை டி.ஐ.ஜி.ஆனந்த்சோமாணி, ஊரக எஸ்.பி. வே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







