காலாவதியாகும் நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர் பதவி உயர்வுப் பட்டியல்

தமிழகம் முழுவதும் மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வுப் பட்டியல் காலாவதி ஆகும்
Updated on
2 min read

தமிழகம் முழுவதும் மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வுப் பட்டியல் காலாவதி ஆகும் நிலையில் இருப்பதால், வருவாய்த் துறை அலுவலர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
 வருவாய்த் துறையில் துணை ஆட்சியர் நிலையில் இருப்பவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர்களாகவும், வட்டாட்சியர் நிலையில் இருப்பவர்கள் துணை ஆட்சியர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்படும். பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வுக்கான பட்டியல் வெளியிடப்பட்டு, அதில் இடம்பெற்றவர்களுக்கு காலியிடங்களுக்கு ஏற்ப ஓராண்டுக்குள் பணிநியமனங்கள் வழங்கப்படும்.
 இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பதவி உயர்வுக்கான பட்டியல் 2016 பிப்.29 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, துணை ஆட்சியர்களாக இருந்த 41 பேர் பணிமூப்பு அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் பதவி உயர்வுப் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் 10 பேருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய 31 பேரில், பதவி உயர்வு கிடைக்காமலேயே 8 பேர் பணி ஓய்வு பெற்றுவிட்டனர். இந்நிலையில், பிப்.28 ஆம் தேதிக்குள் பதவி உயர்வு கிடைக்கவில்லையெனில், அதற்கான அரசாணை காலாவதியாகிவிடும். இதேபோல, துணை ஆட்சியர் பதவி உயர்வுக்கான பட்டியல் அடங்கிய அரசாணை 2016 பிப்.10 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி தமிழகம் முழுவதும் பணிமூப்பின் அடிப்படையில் 140 வட்டாட்சியர்கள், பதவி உயர்வு பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் பல்வேறு கட்டங்களில் 71 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலில் பிப்.9-ஆம் தேதிக்குள் பதவி உயர்வு இல்லையெனில், புதிய பட்டியலுக்கு காத்திருக்க வேண்டிவரும். இதனால், பதவி உயர்வு கிடைப்பதற்கு மேலும் தாமதமாகிவிடும். அதற்குள் பணி ஓய்வு வயதை எட்டிவிட்டால், பதவி உயர்வு கிடைக்காமலேயே போய்விடும்.
 இதனால், மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர் பட்டியலில் இருப்பவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.
 இதுகுறித்து வருவாய்த் துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் மேலும் கூறியது:
 மாவட்ட வருவாய் அலுவலர் பணி நிலையில் தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருக்கின்றன. இதனால் பட்டியலில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் பிரச்னை எழாது. அதேபோல, துணை ஆட்சியர் பணி நிலையில் ஏறத்தாழ 30 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. மேலும், மாவட்ட வருவாய் அலுவலர்களாகப் பதவி உயர்வு பெறும்போது, அவர்கள் தற்போது வகித்து வரும் துணை ஆட்சியர் நிலையிலான 30 இடங்கள் காலியாகும். இதனால், துணை ஆட்சியர் பதவி உயர்வுக்கு காத்திருப்பவர்களுக்கு அவர்களுக்கான பணியிடங்கள் ஒதுக்குவதிலும் பிரச்னை இருக்காது.
 மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியல் ஓராண்டுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையெனில் காலாவதியாகி, அப்பட்டியலில் எஞ்சியிருப்பவர்கள் மறுபட்டியல் வரும் வரை காத்திருக்க வேண்டும். துணை ஆட்சியர் பணிக்கு 57 வயதை அடைந்தவர்கள் பரிந்துரைக்கப்படுவதில்லை. இதனால் பலருக்கும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் இருந்தும் அதைப் பெற முடியாமலேயே ஓய்வு பெறும் சூழல் இருக்கிறது. இதுகுறித்து ஏற்கெனவே அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளோம். இருப்பினும் இதுவரை நடவடிக்கை இல்லை. வரும் பிப்.6 ஆம் தேதி முதல் தினமும் ஒரு மணி நேரம் வெளிநடப்பு போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com