மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆவணிமூலத் திருவிழாவில் புதன்கிழமை கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் அருள்பாலித்தார். வியாழக்கிழமை காலை நாரைக்கு முக்தி அளித்த லீலை பூஜைகள் நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் ஆவணி மூலத் திருவிழாவானது கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிளையாடல் புராணத்தை மையமாக வைத்து பூஜை நடைபெறும் இத்திருவிழாவில், கடந்த 14 ஆம் தேதி வரை தினமும் கோயில் பிரகாரத்தில் சந்திரசேகரர் உற்சவம் நடைபெற்றது.
புதன்கிழமை காலை ஆவணி மூலவீதியில் தங்கச்சப்பரத்தில் சுவாமி, பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள குலாலர் மண்டபத்தில் எழுந்தருளியதும், கருங்குருவிக்கு உபதேச லீலை பூஜைகள் நடைபெற்றன.
பாவம் செய்ததால் கருங்குருவியாகப் பிறந்த மனிதன் காகங்களால் துன்புற்று வந்தான்.
அப்போது சிலர் மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் பொற்றாமரைக்குளத்தில் நீராடினால் விமோசனம் கிடைக்கும் எனக்கூற, கருங்குருவியும் மதுரை வந்து பொற்றாமரைக்குளத்தில் நீராடி இறை அருளைப் பெற்றதாக புராணம் கூறுகிறது. அதனடிப்படையில் பூஜைகள் நடைபெற்றன.
புதன்கிழமை இரவு சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்மன் வெள்ளிச் சிம்மாசன வாகனத்திலும் எழுந்தருளி ஆவணி மூல வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர்.
வியாழக்கிழமை காலை அம்மன் சன்னதி, பூக்கடைத் தெரு வழியாக சுவாமி, அம்மன் எழுந்தருளும் நிலையில், முத்துச்செட்டியார் மண்டபத்தில் நாரைக்கு முக்தி கொடுக்கும் பூஜைகள் நடைபெறுகின்றன. மாலையில் பூக்கடைத் தெருவிலிருந்து கீழமாரட் வீதி, அம்மன்சன்னதி வழியாக ஆவணி மூலவீதிகளில் சுவாமி பூதவாகனத்திலும், அம்மன் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி அருள்பாலிப்பர்.
விழாவில் வெள்ளிக்கிழமை மாணிக்கம் விற்ற லீலை, சனிக்கிழமை தருமிக்குப் பொற்கிழி வழங்கியது, ஞாயிற்றுக்கிழமை உலவாக்கோட்டை அருளியது நடைபெறுகிறது. ஆவணி மூலத்திருவிழாவின் முக்கிய விழாவான, பிட்டுக்கு மண் சுமந்த லீலை வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், இணை ஆணையர் என்.நடராஜன் ஆகியோர் செய்துள்ளனர்.